காஞ்சிபுரத்தில் ரூ.18 கோடியில் ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணிகள் தீவிரம்

காஞ்சிபுரம்: பஞ்ச பூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக இருந்து வருவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாத சுவாமி கோயில். பழமையும், வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் 17 ஆண்டுக்கு பிறகு கும்பாபிஷேக திருப்பணி செய்ய தமிழக அரசு ரூ.18 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. பல்லவர் காலம் தொட்டு நாயக்க மன்னர்கள் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணி செய்தமைக்கு ஆதாரமாக கல்வெட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன. பெரிய ராஜகோபுரம் மன்னர் கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது.

காஞ்சிபுரத்தில் சங்கர மடம் அருகில் மிக உயர்ந்த கோபுரம் கொண்ட கோயிலாக ஏகாம்பரநாத சுவாமி கோயில் உள்ளது. தெற்கு ராஜகோபுரம், பல்லவ கோபுரம், மேற்கு கோபுரம் என 3 வகை ராஜகோபுரங்கள் உள்ளன. கிழக்குத்திசை நோக்கி இருக்கும் ஏகாம்பரநாதர் சந்நிதியில் மூலவராக மணல் லிங்கமாக சுயம்புவாக ஏகாம்பர நாதர் அருள்பாலிக்கிறார். பிற்கால பல்லவர் காலத்தில் கருவறை அமைக்கப்பட்ட சான்றுகள் உள்ளன. சுந்தரர் இடக்கண் பெற்ற திருத்தலமாகும். 6 கால பூஜைகள் நடைபெறும் இந்த கோயிலுக்கு 4 தீர்த்தங்கள் உள்ளது. கோயில் உட்புறத்தில் சிவகங்கை தீர்த்தமும், கம்பா நதித் தீர்த்தமும் உள்ளது. வெளிப்புறத்தில் சர்வதீர்த்தமும், மங்கள தீர்த்தமும் உள்ளன. பெரும் சிவாலயமாக விளங்கும் இங்கு 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான நிலாத்துண்ட பெருமாள் எனும் திவ்ய தேசமும் அமைந்துள்ளது. 4ம் பிரகாரத்தில் ஆயிரம் கால் மண்டபமும் உள்ளது.

பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து முதற்கட்டமாக பாலாலயம் கடந்த 28.6.23 தேதியும், 2வது கட்ட பாலாலயம் 11.2.24ம் தேதியும் நடைபெற்றது. முதற்கட்ட பாலாலய பூஜையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு திருப்பணிகளை தொடக்கி வைத்தார். தற்போது பௌர்ணமி மண்டபம், ஆயிரம் கால் மண்டபம், 3 மற்றும் 4ம் பிரகார மதில் சுவர்கள் பழுது பார்த்தல், சிவகங்கை தீர்த்தக்குளம், நடராஜர் சந்நிதி ஆகியனவற்றில் திருப்பணி தீவிரமாக நடந்து வருகின்றன. கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமி கூறுகையில், ”திருப்பணிகளில் 40 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளது. பெரும் சிவாலயமாக இருப்பதால் கோயில் திருப்பணிகளை தீவிரமாக செய்து வருகிறோம்” என்றார்.

The post காஞ்சிபுரத்தில் ரூ.18 கோடியில் ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: