கர்னூல் மாவட்டத்தில் விவசாய நிலத்தில் வைரத்தை தேடும் பொதுமக்கள்: ரகசியமாக கைமாற்றும் வியாபாரிகள்

திருமலை: கர்னூல் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலத்தில் பொதுமக்கள் வைர கற்களை தேடி வருகின்றனர். அவ்வாறு கிடைக்கும் வைரங்களை ரகசியமாக வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், மதநாதபுரத்தில் விவசாயி ஒருவரின் நிலத்தில் விலைமதிப்புமிக்க வைரக்கல் ஒன்று கடந்த 25ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. அதை விவசாயி வீட்டுக்கு எடுத்துச் சென்றதை அறிந்த வியாபாரிகள் வைரத்தை வாங்க விவசாயி வீட்டின் முன்பு திரண்டனர்.

முடிவில் ரூ.18 லட்சம் மற்றும் 15 சவரன் தங்க நகைகள் கொடுத்து அந்த வைரத்தை வாங்கி சென்றுள்ளனர். ஆனால் அந்த வைரக்கல்லின் சந்தைவிலை ரூ.30 லட்சம் என கூறப்படுகிறது. அதேபோல் மட்டிகேரா மண்டலம், ஹம்பா கிராமத்தை சேர்ந்த ஒருவர் ஒரு வைரக் கல்லை கண்டுபிடித்தார். அது பேராவலி கிராமத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவரால் ரூ.5 லட்சம் பணத்துடன் 4 சவரன் தங்க நகையும் கொடுத்து வாங்கப்பட்டது. இந்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களுக்கு காட்டுத்தீபோல் பரவியது.

இதனால் சுற்றுவட்டார கிராம மக்கள் வைரத்தை தேடி வயல்களுக்கு படையெடுத்து வருகின்றனர். மேலும், கர்னூல் மாவட்டத்தில் வசிப்பவர்கள் மட்டுமின்றி, அனந்தபூர், கடப்பா, பிரகாசம், பெல்லாரி மற்றும் தெலங்கானாவில் இருந்தும் வைர கற்களைத் தேடி இப்பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வருபவர்களில் பலர் ஏமாற்றத்துடன் செல்லக்கூடிய நிலையில், சிலருக்கு மட்டும் கிடைக்கும் வைரகற்கள் ரகசியமாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்து பணம் பார்த்து வருகின்றனர்.

The post கர்னூல் மாவட்டத்தில் விவசாய நிலத்தில் வைரத்தை தேடும் பொதுமக்கள்: ரகசியமாக கைமாற்றும் வியாபாரிகள் appeared first on Dinakaran.

Related Stories: