ஐடி ஊழியர் வீட்டை உடைத்து ரூ.8 லட்சம் நகைகள் கொள்ளை

 

திருக்கனூர், மே 25: புதுச்சேரி திருக்கனூரில் ஐடி ஊழியர் வீட்டை உடைத்து ரூ.8 லட்சம் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அடுத்த திருக்கனூர் ராஜா முகமது நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(31). இவர் மதுராந்தகத்தில் குடும்பத்துடன் தங்கி ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். அவரது வீட்டில் மாமியார் தங்கியிருந்தார். மணிகண்டன், 3 நாட்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். நேற்று முன்தினம் மாமியார் பேரக் குழந்தையுடன் மதுராந்தகத்துக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை மணிகண்டன், மாமியாருடன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலுள்ள பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. பீரோவில் இருந்த மனைவியின் 15 பவுன் நகைகளை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் இதனை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக வீடு இருப்பதாலும், வீட்டில் ஆட்கள் யாரும் இல்லை என்பதை நோட்டமிட்டும் மர்ம ஆசாமிகள் இந்த துணிகர கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்.

வீட்டின் பின்பக்கம் மறைவான இடத்தில் வீட்டின் சாவியை மாமியார் வைத்துச் சென்றுள்ளார். பின்பக்க கதவை கொள்ளையர்கள் உடைத்து, அந்த சாவியை எடுத்து, அதன் மூலமாக பின்பக்க மெயின் கதவை திறந்து வீட்டினுள் புகுந்துள்ளனர். சாவி வைக்கும் இடத்தை கொள்ளையர்கள் நன்கு நோட்டமிட்டு இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்ப்பட்டது.

அது சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இது குறித்து மணிகண்டன், திருக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டும் கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஐடி ஊழியர் வீட்டை உடைத்து ரூ.8 லட்சம் நகைகள் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: