பெரியபாளையத்தில் காட்சிப் பொருளான மகளிர் சுயஉதவிக் குழு கட்டிடம்

 

ஊத்துக்கோட்டை, மே 24: தமிழகத்தில் மகளிர் சுயஉதவி குழுக்கள் மாநில அரசின் பெண்கள் மேம்பாட்டு கழகம் மூலம் கடந்த 1989ம் ஆண்டு துவங்கப்பட்டது. மகளிர் சுயசார்பு பெற உதவியதால், இக்குழுக்கள் வேகமாக அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டன. மேலும் மகளிர் குழுக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியது. அவற்றில் முக்கியமானது சுயதொழில் செய்யும் குழுக்களுக்கு உதவியாக ஊராட்சி பகுதியில் பயிற்சி மற்றும் பணிமனை கூடங்கள் அமைத்து தரப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டத்தில் பல ஊராட்சிகளில் நூற்றுக்கணக்கான மகளிர் குழு கட்டிடங்கள் கட்டப்பட்டன. அவற்றில் பெரும்பாலான கட்டிடங்கள் சுயஉதவிக் குழுவினர் பயன்படுத்தாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் மகளிர் குழு கூட்டங்களின் கூட்டம் திண்ணை, கோயில், மரத்தடியில் நடத்தப்படுகிறது. இந்நிலையில் பெரியபாளையம் ஊராட்சியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கான பயிற்சி மைய கட்டிடம் ரூ.10 லட்சம் செலவில் 2008 – 09ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை சுய உதவிக்குழுவினர் சில வருடங்கள் மட்டுமே பயன்படுத்தினர்.

பின்னர் அதை அப்படியே பயன்படுத்தாமல் விட்டு விட்டனர். இதனால் கட்டிடம் பயன்பாடு இல்லாமல் தற்போது புதர்கள் மண்டியும், கட்டிடத்தின் மீது பெரிய அரச மரம் ஒன்றும் வளர்ந்து காட்சியளிக்கிறது. மேலும் இங்கு பிடிஒ அலுவலகத்தின் தேவையற்ற பொருட்களை போட்டு வைத்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதர்கள் மண்டி, தேவையற்ற பொருட்களை அகற்றியும், சுய உதவிக்குழு கட்டிடத்தை சீரமைத்து மகளிர் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என மகளிர் குழுவினரும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பெரியபாளையத்தில் காட்சிப் பொருளான மகளிர் சுயஉதவிக் குழு கட்டிடம் appeared first on Dinakaran.

Related Stories: