அரசு அருங்காட்சியகத்தில் மாணவிகளுக்கு கல்வெட்டியல் பயிற்சி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் பயிற்சி தொடங்கியது.கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், நேற்று முதல், சேலம் சாரதா கல்லூரி, தர்மபுரி விஜய் வித்யாலயா, ஊத்தங்கரை அதியமான் கல்லூரிகளைச் சேர்ந்த வரலாற்றுத்துறை மற்றும் தமிழ்த்துறை மாணவிகள் 40 பேருக்கு 15 நாட்கள் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் பயிற்சி தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத் தலைவர் நாராயணமூர்த்தி பயிற்சியை தொடங்கி வைத்தார்.

ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் வாழ்த்துரை வழங்கினார். அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ், மாணவிகளுக்கு இப்பயிற்சியை வழங்கி வருகிறார். அருங்காட்சியகப் பணியாளர்கள் செல்வகுமார் மற்றும் பெருமாள் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்கிறார்கள்.முதல் நாளில், மாவட்டத்தின் தொல்லியல் சின்னங்கள், கல்வெட்டுகள், நடுகற்கள், பாறை ஓவியங்கள் குறித்து அறிமுக வகுப்பு நடத்தப்பட்டது.

தொடர்ந்து, தமிழி எழுத்துகளின் தோற்றம், வளர்ச்சி குறித்து பயிற்சி அளித்த பின்னர், பெண்ணேஸ்வரமடம் சிவன் கோயிலுக்கு மாணவிகளை அழைத்துச் சென்று கல்வெட்டுகளை நேரடியாக படியெடுத்து படிக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், கோயில் கட்டிடக் கலை, சிற்பங்கள் குறித்த பயிற்சியும், அருங்காட்சியக காட்சிப்பொருட்களை பாதுகாப்பதற்கான வேதியியல் பொருட்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

The post அரசு அருங்காட்சியகத்தில் மாணவிகளுக்கு கல்வெட்டியல் பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: