கே.வி.குப்பம் அருகே மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த பெண் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை

கே.வி.குப்பம் : கே.வி.குப்பம் அருகே மூளைச்சாவடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த பெண் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. கே.வி.குப்பம் அடுத்த சென்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார். குடியாத்தம் அடுத்த விநாயகபுரம் பாலிடெக்னிக் கூட்ரோடு பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சத்யா(41). இவர் தலைவலி காரணமாக கடந்த 17ம் தேதி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் மூளைசாவடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர். அதனடிப்படையில் சத்யாவின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்பின்னர், சத்யாவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்நிலையில் உடல் உறுப்புகள் தானம் செய்த சத்யாவின் உடலுக்கு நேற்று தமிழக அரசு சார்பாக சப்-கலெக்டர் சுபலட்சுமி, தாசில்தார் சந்தோஷ் உள்ளிட்ட அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

மகளின் படிப்பு செலவை ஏற்க கோரிக்கை

அரசு சார்பில் சத்யாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், சத்யாவின் கணவர் சசிகுமார் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் சத்யாவின் மகள் தற்போது பிளஸ் 2 முடித்து விட்டு தனியார் கல்லூரியில் சேர உள்ளார். அவரது படிப்பு செலவை அரசு ஏற்க வேண்டும் என சப்-கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். உங்கள் கோரிக்கை மாவட்ட நிர்வாகத்திற்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் கூறினர். அதைத்தொடர்ந்து உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதன் மூலம் 13 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் எடுத்துக்கூறி அவரது கணவருக்கு ஆறுதல் கூறினர்.

The post கே.வி.குப்பம் அருகே மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த பெண் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: