4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை எதிரொலி தயார் நிலையில் 296 வீரர்கள் அடங்கிய 10 பேரிடர் மீட்பு குழுக்கள்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினை சேர்ந்த 296 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள் கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி, நீலகிரி மாவட்டங்களில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வருவாய் பேரிடர் மேலாண்மை துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரை 37 மாவட்டங்களில் மழைபொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், சராசரியாக 1.77 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகப்படியாக நாமக்கல் மாவட்டத்தில் 7.12 செ.மீ பதிவாகியுள்ளது. கடலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னல் தாக்கியதன் காரணமாகவும், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும் 2 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில், பேரிடர் சூழலை திறம்பட கையாள்வதற்கு வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறையினைப் பின்பற்றி, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கு பலத்த காற்று, கடல் அலை குறித்தும், பொதுமக்களுக்கு கடல்சீற்றம் குறித்தும் எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்படுகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதாலும், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாலும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் உள்ள 4.05 கோடி செல்போன்களுக்கு பொதுவான எச்சரிக்கை நடைமுறைகள் குறித்து எஸ்எம்எஸ் மூலம் செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 296 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள் கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி, நீலகிரி மாவட்டங்களில் தயார் நிலையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு வருகிற 24ம் தேதி (வெள்ளிக்கிழமை) முடிய கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா தலங்களுக்கு வருவதை தவிர்க்கலாம் என்று பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களும் செய்திக்குறிப்புகளை வெளியிட்டுள்ளனர். மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள், கூடுதல் அலுவலர்களுடன் 24 மணி நேரமும் செயல்பட்டு, நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கு பலத்த காற்று, கடல் அலை குறித்தும், பொதுமக்களுக்கு கடல்சீற்றம் குறித்தும் எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்படுகின்றன.

* 5 நாளில் 11 பேர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் கனமழையின் காரணமாக கடந்த 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை 11 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தமிழக கடற்கரை, குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 40 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்தப் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் 23ம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

The post 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை எதிரொலி தயார் நிலையில் 296 வீரர்கள் அடங்கிய 10 பேரிடர் மீட்பு குழுக்கள்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: