வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகிறது: தமிழ்நாட்டில் மழை நீடிக்கும்

சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று இன்று உருவாகும் என்றும், அது மேலும் வலுப்பெற்று 24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புள்ளது. அதனால் தமிழ்நாட்டில் அனேக இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை நீடித்து வந்த கோடை வெயிலின் வெப்பம் படிப்படியாக குறைந்து இயல்பு நிலையை ஒட்டி இருக்கிறது. தென் மாவட்டங்களில் நீடித்து வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கோடை மழை பெய்யத் தொடங்கியதால் வெப்பம் தணிந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிகழ்வின் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பலான இடங்களில் இயல்பைவிட குறைந்த அளவில் வெப்ப நிலை இருந்தது. குறிப்பாக, தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, சேலம், திருச்சி மாவட்டங்களில் இயல்பைவிட -3 டிகிரி செல்சியஸ் குறைவாகவும், கரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களில் இயல்பைவிட -3 டிகிரி முதல் -5 டிகிரி செல்சியஸ் குறைவாகவும், ஈரோடு மாவட்டத்தில் இயல்பைவிட மிக மிகக் குறைவாக -1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தது.

அதன்தொடர்ச்சியாக நேற்று கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்தது. மேலும், நீலகிரி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. மழை நீடிக்கும் என்பதால் நேற்று தமிழ்நாட்டில் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டது.

மேலும், கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். அதன் தொடர்ச்சியாக 24ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம் மேலும் வலுப்பெற்று வருவதால், அது இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் வாய்ப்புள்ளது.

அது வட கிழக்கில் நகர்ந்து, மத்திய வங்கக் கடல் பகுதிகளில் 24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புள்ளது. அதனால் 24ம் தேதி வரை கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதையடுத்து, தமிழக கடலோரப் பகுதிகள், கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகள், மத்திய வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

* தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம் மேலும் வலுப்பெற்று வருவதால், அது இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறலாம்.
* இது வடகிழக்கில் நகர்ந்து, மத்திய வங்கக் கடல் பகுதிகளில் 24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புள்ளது.
* இதன் காரணமாக, 24ம் தேதி வரை கனமழை பெய்யும்.

The post வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகிறது: தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் appeared first on Dinakaran.

Related Stories: