தடைக்காலம் எதிரொலி உக்கடம் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு: வஞ்சிரம் கிலோ ரூ.1,200க்கு விற்பனை

கோவை: மீன்பிடி தடைக்காலம் என்பதால் கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்ந்துள்ளது. வஞ்சிரம் கிலோ ரூ.1,200க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது. கோவை உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் உள்ள மொத்த மீன் மார்க்கெட்டுக்கு தூத்துக்குடி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் மீன்கள் வருகிறது. தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது.

இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய மீன்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் கோவை உக்கடம் லாரிப்பேட்டை மொத்த மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்ந்துள்ளது. மார்க்கெட்டில் இன்று விற்பனையான மீன்கள் விலை நிலவரம் கிலோவில் வருமாறு: வஞ்சிரம் ரூ.1200, மத்தி ரூ.200, நெத்திலி ரூ.250, ஊழி ரூ.400, அயிலை ரூ.250, கிழங்கா ரூ.100, சங்கரா ரூ.300, கடல் இறால் ரூ.500, வளர்ப்பு இறால் ரூ.400, கட்லா, ரோகு, நெய்மீன் தலா ரூ.140க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து உக்கடம் மீன் மார்க்கெட் வியாபாரி முகமது சன்ஃபிர் கூறுகையில், தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் என்பதால் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மீன்கள் வருகிறது. இதனால் வழக்கத்தை விட மீன் விலை அதிகரித்துள்ளது. வழக்கமாக ரூ.700க்கு விற்பனையாகும் வஞ்சிரம் மீன் ரூ.1200க்கு விற்கப்படுகிறது. மற்ற மீன்களும் கிலோவுக்கு ரூ.100 வரை விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்தபின் விலை குறைந்து பழைய நிலைக்கு விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தடைக்காலம் எதிரொலி உக்கடம் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு: வஞ்சிரம் கிலோ ரூ.1,200க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: