மாநகராட்சி ஆணையர் பெயரில் பேஸ்புக்கில் போலியான கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சி: காவல் நிலையத்தில் புகார்

சென்னை, மே 12: சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பெயரில் பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி, பணம் கேட்டு தொந்தரவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக, சமூக வலைதளங்களில் அரசு அதிகாரிகள், பிரபலங்கள் பெயரில் போலியான கணக்கு தொடங்கி, அதன் மூலம் பணம் பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சைபர் க்ரைம் குற்றங்களை யாராலும் தடுத்து நிறுத்தமுடியவில்லை. குறிப்பாக, முகநூலில் இதுபோன்ற மோசடி நபர்கள் அதிக அளவில் உலா வருகின்றனர். இவர்கள், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், முக்கிய நபர்கள் என்று கூறி பண மோசடியில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையரான ராதாகிருஷ்ணன் பெயரில் பேஸ்புக் கணக்கு ஒன்றிலிருந்து அவரது நட்பு வட்டத்தில் உள்ள நபருக்கு நட்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை நம்பி அதனை ஏற்றபோது, மெசஞ்சர் மூலம் சாட்டிங் செய்து, பணம் வழங்குமாறு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், வணக்கம் சார். எனக்கு பணம் தேவைப்படுகிறது. நீங்கள் ஜி பே மூலம் அனுப்புங்கள். சீக்கிரமாக அனுப்புங்கள் என +91 6283805581 என்ற எண்ணிலிருந்து ஆனந்த் சிங் என்பவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அந்த நபர், பணம் அனுப்பாமல் இது தொடர்பாக ராதாகிருஷ்ணனை நேரில் தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார். அப்போதுதான் ராதாகிருஷ்ணன் பெயரில் மோசடியாக பேஸ்புக் பக்கம் துவங்கி பணம் கேட்டு மோசடியில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.

இதுதொடர்பாக காவல் நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம் என, அவர் சம்பந்தப்பட்ட ஸ்கிரீன்ஷாட்களை பதிவிட்டு கோரிக்கை விடுத்துள்ளார். இதுவரை சாமானியர்கள் பெயரால் மோசடியில் ஈடுபட்டு வந்த நபர்கள், தற்போது பிரபலங்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளை குறிவைத்து இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அந்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து, இது என்னுடைய தொலைபேசி எண் அல்ல. பணம் பறிக்கும் போலி வாட்ஸ்அப் கணக்கு. இதில் நேரத்தை வீணாக்க வேண்டாம், இந்த அக்கவுன்ட்டை பிளாக் மற்றும் ரிப்போர்ட் செய்யவும். இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் அளித்திருக்கிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

The post மாநகராட்சி ஆணையர் பெயரில் பேஸ்புக்கில் போலியான கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சி: காவல் நிலையத்தில் புகார் appeared first on Dinakaran.

Related Stories: