வல்லம் பேரூராட்சியில் சட்டத்திற்கு புறம்பாக குடிநீர் குழாயுடன் பொருத்தப்பட்ட 10 மின்மோட்டார் பறிமுதல்

வல்லம், மே12: தஞ்சாவூர்அருகே வல்லத்தில் குடிநீர் குழாயில் மின் மோட்டாரை இணைத்து தண்ணீர் எடுக்கப்படுவதாக தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் வந்தன. குடிநீர் குழாயில் மின்மோட்டார்கள் வைத்து தண்ணீர் உறிஞ்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து வல்லம் தேர்வுநிலை பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று அதிரடியாக சட்டத்திற்கு புறம்பாக குடிநீர் குழாயுடன் மோட்டார் வைத்து உறிஞ்சும் நபர்களின் வீடுகள் பேரூராட்சி பணியாளர்களின் மூலம் நேரடி ஆய்வு செய்து கண்டறியப்பட்டது.

தொடர்ந்து இவ்வாறு குடிநீர் குழாயில் இணைக்கப்பட்டு இருந்த மின் மோட்டார்களை பேரூராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வல்லம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகர் கூறுகையில், சட்டத்திற்கு புறம்பாக குடிநீர் குழாயுடன் மின் மோட்டார் இணைத்து தண்ணீர் எடுக்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குடிநீர் குழாயில் மின்மோட்டார்களை பொருத்தியிருந்த நபர்கள் வீடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 10க்கும் அதிகமான மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post வல்லம் பேரூராட்சியில் சட்டத்திற்கு புறம்பாக குடிநீர் குழாயுடன் பொருத்தப்பட்ட 10 மின்மோட்டார் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: