தேர்தல் ஆணையம் அறிவுரை என்ற பெயரில் மிரட்டுகிறது: கார்கே


புதுடெல்லி: முதல் 2 கட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் தாமதமாக அறிவித்தது தொடர்பாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு திறந்த கடிதம் ஒன்றை சமீபத்தில் அனுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி நியாயமாக தேர்தல் நடத்துவதில் குழப்பத்தை ஏற்படுத்த கார்கே முயல்வதாக கடிதம் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், இதற்கு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களுக்கு கார்கே எழுதிய பதில் கடிதத்தில், ‘‘ஆளும் கட்சி தலைவர்களின் அப்பட்டமான வகுப்புவாத மற்றும் சாதிவெறி பேச்சுக்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு நேரடியாக எவ்வளவு புகார்கள் தந்தும் அதையெல்லாம் புறக்கணித்த தேர்தல் ஆணையம், இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு நான் எழுதிய கடிதத்திற்கு மட்டும் பதில் அளித்திருப்பது ஆச்சரியத்தை தருகிறது. அவர்களே அழுத்தத்தின் கீழ் பணியாற்றுவதை நான் புரிந்து கொண்டுள்ளேன். ஆனால் தேர்தல் ஆணையத்தின் கடிதம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுரை கூறும் பெயரில் மிரட்டுவதாக உள்ளது’’ என கூறி உள்ளார்.

ஏன் அம்பானி, அதானி மீது நடவடிக்கை இல்லை?
பீகாரின் சமஸ்திபூர், முசார்பூரில் நேற்று பிரசாரம் செய்த கார்கே பேசுகையில், ‘‘ நாங்கள் அம்பானி, அதானியிடம் கருப்பு பணத்தை வாங்கியதால்தான் அவர்களைப் பற்றி பேசாமல் இருப்பதாக மோடி குற்றம்சாட்டுகிறார். அப்படி என்றால் அதைப் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? அதானி, அம்பானியிடம் கருப்பு பணம் இருப்பதை மோடியே ஒப்புக் கொண்டுள்ளார். அப்படி என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? இதற்கெல்லாம் மோடி பதில் சொல்ல வேண்டும்’’ என்றார்.

The post தேர்தல் ஆணையம் அறிவுரை என்ற பெயரில் மிரட்டுகிறது: கார்கே appeared first on Dinakaran.

Related Stories: