மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தில் தேன் கொள்முதல் தொடக்கம்

*போராட்டம் முடிவுக்கு வந்தது

மார்த்தாண்டம் : மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் தேன் கொள்முதல் தொடங்கியது. இதனையடுத்து தேனீ வளர்ப்போர் போராட்டம் முடிவுக்கு வந்தது.
மார்த்தாண்டம் தேனீ வளர்போர் கூட்டுறவு சங்கம் வெட்டுவெந்நியில் உள்ளது. தேன் உற்பத்தியாளர்களின் வளர்ச்சிக்காகவும் நலனுக்காகவும் இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது மொத்தமாக 2087 உறுப்பினர்கள் உள்ளனர்.

ஆண்டுதோறும் 11 மாதங்கள் தேன் கூடுகளை தோட்டங்களில் வைத்து பிப்ரவரி முதல் மார்ச் வரை தேன் சீசனாக கருதப்படுகிறது.இந்த சீசனின் போது தேனீ உற்பத்தியாளர்கள் தேனை எடுத்து மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தில் கொடுப்பது வழக்கம் இந்த சங்கத்தில் ஆண்டுதோறும் மூன்றரை லட்சம் கிலோ தேன் கொள்முதல் செய்யப்படுகிறது. பச்சைத்தேன் ஒரு கிலோ ரூ. 155க்கு வாங்கப்படுகிறது.

அனைவரிடம் தேனை கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தேன் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து கூட்டுறவு சங்க அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் சமீபத்தில் கஞ்சி தயார் செய்தும் போராட்டமும் நடைபெற்றது. இந்த நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜை சந்தித்து தேன் உற்பத்தியாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். இது தொடர்பான துறை அமைச்சரிடம் பேசப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று முதல் தேன் கொள்முதல் தொடங்கியது. தேனின் அடர்த்தி 73 புள்ளியாக தீர்மானிக்கப்பட்டது. இந்த அடிப்படையில் கொள்முதல் நடந்து வருகிறது. இதனால் தேன் உற்பத்தியாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. தேன் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தில் தேன் கொள்முதல் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: