திசையன்விளை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று காலை திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரில் உள்ள ஜெயக்குமார் இல்லத்திற்கு வந்தார். அங்கு அவரது மகன்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நடந்தது திட்டமிட்ட கொலை தான். வெளியிடத்தில் கொலை செய்துவிட்டு இங்கு உடலை கொண்டு வந்து எரித்துள்ளனர். தொழில் ரீதியான கொலையாளிகள், அதாவது கூலிப்படையினர் தான் இதை செய்திருக்க வேண்டும். தமிழக காவல்துறை மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறோம். விரைவாக குற்றவாளிகளை கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகிறோம். கொலை என்பது உறுதி. இதைத் தவிர நான் வேறு எதுவும் சொல்ல முடியாது. இதை அரசியலாக்க விரும்பவில்லை. காவல்துறை தான் இந்த கொலை குறித்த ரகசியத்தை மீட்டெடுக்க வேண்டும். ஜெயக்குமார் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அவரது கஷ்டங்கள் குறித்து என்னுடன் எதுவும் பகிர்ந்து கொள்ளவில்லை. அவர் எழுதிய கடிதங்களை நானும் பார்த்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post நெல்லை மாவட்ட காங்., தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் திட்டமிட்டு கொன்றுவிட்டு இங்கு வந்து எரித்துள்ளனர்: கே.எஸ்.அழகிரி பகீர் பேட்டி appeared first on Dinakaran.