தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சார்பில் தாகமுள்ள மக்களுக்கு இலவச தண்ணீர் விநியோகிக்க தண்ணீர் பந்தல் திறப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருந்தது.

இந்த கடிதத்துக்கு, டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையம் நேற்று பதில் அளித்துள்ளது. அதன்படி, தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் முன்மொழியப்பட்ட முன்மொழிவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்துள்ளது. அதில், எந்த ஒரு அரசியல் கட்சியும், வேட்பாளரும் இந்த செயல்பாட்டின் மூலமாக எந்த விதத்திலும் அரசியல் ரீதியாக பயன்பெறக்கூடாது எனவும், தண்ணீர்பந்தல் திறப்பின்போது தேர்தல் நடத்தை விதிகள் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் அதில் தெரிவித்துள்ளது.

எனவே, தமிழகத்தில் தண்ணீர்பந்தல் திறக்க விரும்பும் எந்தவொரு அரசியல் கட்சியும், வேட்பாளரும், இந்திய தேர்தல் ஆணையத்தின் மேற்கண்ட வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, சுகாதாரம், தூய்மையான குடிநீர் தொடர்பான அரசாங்கத்தின் பிற அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் கோரிக்கையின் அடிப்படையில் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தண்ணீர் பந்தல் வைக்க அனுமதிக்கலாம். அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் அவரவருடைய எல்லைக்குள் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி சரியான முறையில் தண்ணீர்பந்தல் செயல்பாடுகள் நடைபெறுகின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: