ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேட்டில் மீன் வாங்க அசைவ பிரியர்கள் குவிந்தனர்: வரத்து குறைவால் விலை உயர்வு

சென்னை: சென்னை காசிமேடு துறைமுகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் வசிக்கும் முக்கால்வாசி பேர் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு நேரடியாக சென்று மீன்கள் வாங்குவது வழக்கம். இதனால், எப்போதும் காலை நேரத்தில் இங்கு மீன் வாங்க கூட்டம் அதிகமாக காணப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக கூட்டம் வரும். சென்னையில் பெய்த மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க வருபவர்களின் எண்ணிக்கை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கணிசமான அளவு குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மழை ஓய்ந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். அது மட்டுமல்லாமல் நேற்று ஞாயிற்றுக்கிழமை வேறு. இதனால், அசைவ பிரியர்கள் மீன் வாங்க நேற்று காலை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை நோக்கி படையெடுத்தனர். அதே நேரத்தில் மீன்கள் விலை கடந்த வாரத்தை விட 25 சதவீதம் வரை உயர்ந்தது. இதையும் பொருட்படுத்தாமல் அசைவ பிரியர்கள் மீன்களை வாங்கி சென்ற காட்சியை காணமுடிந்தது.இதுகுறித்து அகில இந்திய மீனவர் சங்க செய்தி தொடர்பாளர் நாஞ்சில் ரவி கூறியதாவது: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 2000 படகுகள் உள்ளன. மழை, புயலால் குறைந்த அளவிலான விசை படகுகள்தான் தற்போது மீன்பிடிக்க செல்கின்றன. கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வரக்கூடிய மீன்களின் வரத்து கணிசமாக தற்போது குறைந்துள்ளது. டீசல் விலை உயர்வு மற்றும் மீன்பிடிக்க தேவையான மூலப்பொருட்களான கயிறு, கட்டை போன்ற பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் மீன்கள் விலை சற்று உயர்ந்துள்ளது. வரக்கூடிய காலங்களில் டீசல் விலை உயர்வு காரணமாக மீன்கள் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.குறைந்த அளவிலான மீன்கள் வந்ததால் கடந்த வாரம் கிலோ ரூ.520க்கு விற்ற வஞ்சிரம் ரூ.700க்கு விற்கப்பட்டது. கறுப்பு வவ்வால் ரூ.430லிருந்து ரூ.550, சங்கரா ரூ300லிருந்து ரூ.340, சீலா ரூ.250லிருந்து ரூ.300, நண்டு ரூ.185லிருந்து ரூ.230, கடல் இறால் ரூ.320லிருந்து ரூ.400 என்று விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தை காட்டிலும் 22 முதல் 25 சதவீதம் வரை மீன்கள் விலைஉயர்ந்துள்ளது. ஒன்றிய, மாநில அரசுக்கு ஆண்டுக்கு 70,000 கோடி அன்னிய செலாவணியை மீனவர்கள் ஈட்டி கொடுக்கிறார்கள். எனவே, பெரிய படகுகளுக்கு மாதம் 1800 லிட்டர் டீசல் மானியமாக வழங்கப்படுவதை, 5000 லிட்டராகவும்,சிறிய படகுகளுக்கு ஆண்டுக்கு 4000 லிட்டரை 10,000 லிட்டராக வும் உயர்த்தி வழங்க வேண்டும். வலை, நூலுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு விலக்கு அளிக்க வேண்டும். மீன்பிடி தொழில் ஏற்கனவே ஐசியூவில் இருந்தது. தற்போது கோமோ ஸ்டேஜிக்கு போய்விட்டது. இதை காப்பாற்ற முதல்வர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை, மீன்வள பூங்காவாக அறிவிக்க வேண்டும் என்றார். இந்த விலை காசிமேடு துறைமுகத்தில்தான். இங்கிருந்து வாங்கி விற்பவர்கள் கிலோவுக்கு ரூ.60 வரை அதிகமாக  விற்பது குறிப்பிட்டத்தக்கது….

The post ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேட்டில் மீன் வாங்க அசைவ பிரியர்கள் குவிந்தனர்: வரத்து குறைவால் விலை உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: