கோயம்பேடு மேம்பாலத்தில் தறிகெட்டு ஓடிய கார் கவிழ்ந்தது குடும்பத்தினர் உயிர் தப்பினர்: ரிக்‌ஷா தொழிலாளி முதுகு உடைந்தது

அண்ணாநகர்: சொந்த ஊர் திருவிழாவுக்கு சென்றபோது கார் கவிழ்ந்து குடும்பத்தினர் உயிர் தப்பினர். ஆனால் ரிக்‌ஷாவில் சென்ற தொழிலாளியின் முதுகு உடைந்தது. சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் பவித்ரன்(29). இவர் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் போலீஸ்காரர். இவரது மனைவி இசக்கியம்மாள்(27). இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. இவர்கள் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் பகுதியில் நடைபெறும் கோயில் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக காரில் சென்றார். கோயம்பேடு மேம்பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடியது. இதனால் காரை கட்டுப்படுத்த முடியாததால் முன்னாடி சென்றுக்கொண்டிருந்த மீன்பாடி வண்டி மீது கார் மோதியதில் கூலி தொழிலாளி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவருக்கு முதுகெலும்பு முறிந்து வலியால் துடித்தார்.

இந்த விபத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்ததில் உள்ளே இருந்த பவித்ரன் உள்பட அனைவரும் வெளியே வர முடியாமல் தவித்தனர். அவ்வழியாக வந்த சிலர் ஓடிவந்து காரில் சிக்கிக்கொண்டவர்களை மீட்டனர். இதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியதால் கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் சாலையில் கவிழ்ந்துகிடந்த காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்தில் சிக்கியவர் பெருங்குடி பகுதியை சேர்ந்த மோசஸ்(54) என்பதும் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்துவருகின்றார் என்பதும் தெரிந்தது. அவரை உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post கோயம்பேடு மேம்பாலத்தில் தறிகெட்டு ஓடிய கார் கவிழ்ந்தது குடும்பத்தினர் உயிர் தப்பினர்: ரிக்‌ஷா தொழிலாளி முதுகு உடைந்தது appeared first on Dinakaran.

Related Stories: