யாரும் ஓட்டு போட கூடாது; ராகுல் தொகுதியில் துப்பாக்கிகளுடன் வந்து மக்களை மிரட்டிய நக்சலைட்டுகள்: கேரளாவில் பரபரப்பு வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு

திருவனந்தபுரம்: கேரளாவின் 20 தொகுதிகளுக்கும் நாளை ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளதால் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இதையடுத்து அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா களமிறக்கப்பட்டுள்ளார். பாஜ வேட்பாளராக மாநில பாஜ தலைவர் கே.சுரேந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார்.

வயநாடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் உள்ளனர். இவர்கள் அடிக்கடி ஊருக்குள் வந்து வன்முறையில் ஈடுபடுவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கு தலப்புழா அருகே உள்ள கம்பமலைப்பகுதியில் ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் வந்து அரசியல் கட்சி அலுவலகங்களை சூறையாடினர். அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் அடித்து நொறுக்கினர்.

இந்தநிலையில் நேற்று காலை சுமார் 6.15 மணி அளவில் கம்பமலை பகுதியில் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிக்கு 4 மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த நக்சலைட்டுகள் வந்தனர். அவர்களில் 2 பேரிடம் துப்பாக்கிகள் உள்பட ஆயுதங்கள் இருந்தன. சுமார் 20 நிமிடங்கள் அந்த பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களிடம் பேசியவர்கள், மக்களவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பின்னர் சிறிது நேரம் அரசு மற்றும் போலீசுக்கு எதிராகவும், தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்பிவிட்டு அவர்கள் வனப்பகுதிக்குள் சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை மற்றும் அதிரடிப் படையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் வனப்பகுதிக்குள் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டனர்.நக்சலைட்டுகள் நடமாட்டத்தை தொடர்ந்து வயநாடு மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

The post யாரும் ஓட்டு போட கூடாது; ராகுல் தொகுதியில் துப்பாக்கிகளுடன் வந்து மக்களை மிரட்டிய நக்சலைட்டுகள்: கேரளாவில் பரபரப்பு வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Related Stories: