மதுரை கோட்டத்தில் 2ம் இடம் பிடித்தது நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தின் வருவாய் ரூ.130 கோடியாக உயர்வு

*மேம்பாட்டு பணிகளை விரைவு படுத்தாத ஒன்றிய அரசு

நெல்லை : மதுரை கோட்டத்தில் வருவாய் அடிப்படையில் இரண்டாமிடம் பிடித்துள்ள நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தின் வருவாய் ரூ.130 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2022-23ம் ஆண்டில் 111 ேகாடி வருவாய் ஈட்டிய நெல்லை ரயில் நிலையத்தின் வருவாய், தற்போது மேலும் உயர்ந்துள்ள நிலையில் அதற்கேற்ப வசதிகளை செய்து தர வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.

தமிழ்நாடு, கேரளாவை உள்ளடக்கிய தெற்கு ரயில்வேயில் வருமானத்தை அள்ளிக் குவிக்கும் ரயில் நிலையங்களில் ஒன்றாக நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் திகழ்ந்து வருகிறது. கொரோனா காலக்கட்டத்தில் கூட இந்த ரயில் நிலையம் மூலம் தெற்கு ரயில்வேக்கு நல்ல வருவாய் கிட்டியது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் ரூ.111.7 கோடி வருமானத்துடன் நெல்லை ரயில் நிலையம் தெற்கு ரயில்வே பட்டியலில் 12 வது இடத்தை பிடித்தது. மதுரை கோட்டத்தில் 2ம் இடம் பிடித்த நெல்லை சந்திப்பு ரயில் நிலையம், தற்போது 2023-24ம் ஆண்டுக்கான பட்டியலிலும் அதை தக்க வைத்துக் கொண்டுள்ளது. தற்போது அதன் வருவாய் ரூ.130 கோடியாக உயர்ந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

2023-24ம் ஆண்டுக்கான வருவாய் பட்டியலில் மதுரை கோட்டத்தில் முதலிடம் பெற்றுள்ள மதுரை ரயில் நிலையம் ரூ.215 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இந்த ரயில் நிலையத்தை கடந்த ஓராண்டில் 1 கோடியே 58 லட்சம் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். ரூ.130 கோடி வருவாய் ஈட்டியுள்ள நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை ஒரு கோடியே 6 லட்சம் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். மதுரை கோட்டத்தில் 3ம் இடத்தில் திண்டுக்கல் ரயில் நிலையம் ரூ.49 கோடி வருவாய் ஈட்டி, 47 லட்சம் பயணிகளை கையாண்டுள்ளது.

4ம் இடத்தில் தூத்துக்குடி ரயில் நிலையம் ரூ.31 கோடி வருவாயை ஈட்டி, 13 லட்சம் பயணிகளை கையாண்டுள்ளது. ரூ.26 கோடி வருவாயை ஈட்டி ராமநாதபுரம் 5ம் இடத்திலும், ரூ.25 கோடி வருவாய் ஈட்டி விருதுநகர் ரயில் நிலையம் 6ம் இடத்திலும், ரூ.24 கோடி வருவாய் ஈட்டி மண்டபம் 7ம் இடத்திலும் உள்ளன. ரூ.24 கோடி வருவாய் ஈட்டி கோவில்பட்டி 8ம் இடத்திலும், ரூ.21 கோடி வருவாயை ஈட்டி தென்காசி 9ம் இடத்திலும், ரூ.18 கோடி வருவாய் ஈட்டி திருச்செந்தூர் 10ம் இடத்திலும் உள்ளன.

மதுரை கோட்டத்தில் முதல் 10 வருவாயை ஈட்டி தரும் ரயில் நிலையங்களில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய 5 ரயில் நிலையங்கள் இடம் பெற்றுள்ளன. கொரோனாவிற்கு பின்னர் மதுரை கோட்டத்திற்கு வருவாய் ஈட்டி தருவதில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட ரயில் நிலையங்கள் முன்னிலை வகிக்கின்றன. நெல்லையை மையமாக கொண்டு இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயிலின் மூலம் கடந்த சில மாதங்களாகவே தெற்கு ரயில்வே வருவாயை அள்ளி வருகிறது. எனவே நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை பெருக்குவதோடு, அதன் கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டிய பணிகளை தெற்கு ரயில்வே விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பயணிகள்
விரும்புகின்றனர்.

The post மதுரை கோட்டத்தில் 2ம் இடம் பிடித்தது நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தின் வருவாய் ரூ.130 கோடியாக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: