ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு ரூ.529 கோடி சொத்து; ரூ.82 கோடி கடன் வாங்கிய தங்கை ஷர்மிளா

அமராவதி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இந்த சட்டப்பேரவை தேர்தலில் புலிவேந்துலா தொகுதியில் போட்டியிடுகிறார். இதை முன்னிட்டு நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் அவரது சொத்து மதிப்பு ரூ.529.50 கோடியாக உள்ளது. 2019 சட்டப்பேரவை தேர்தலின் போது, ரூ. 375.20 கோடி சொத்து கணக்கை காட்டியிருந்தார். தற்போது அவரது சொத்து மதிப்பு 41 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அவருக்கு 58 கோடி சொத்து குவிந்துள்ளது. ஜெகனின் மனைவி பாரதி ரெட்டிக்கு ரூ.176.30 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளன. அவரிடம் 6.4 கிலோ தங்கம் மற்றும் வைரங்கள் உள்ளன. அதன் சந்தை மதிப்பு ரூ.5.30 கோடி. ஜெகன் மீது 26 வழக்குகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அவர் முதல்வர் ஆவதற்கு முன்பு சிபிஐ மற்றும் ஈடியால் பதிவு செய்யப்பட்டவை.

அதே சமயம் கடப்பா மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் முதல்வர் ஜெகனின் தங்கையும், மாநில காங்கிரஸ் தலைவருமான ஷர்மிளா, தனது சகோதரர் முதல்வர் ஜெகனிடம் இருந்து ரூ.82 கோடி கடன் வாங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது குடும்ப சொத்துக்கள் ரூ.182 கோடி என்று குறிப்பிட்டுள்ளார். அதே போல் ஜெகனின் மனைவி பாரதி ரெட்டிக்கு ரூ.19.56 லட்சம் கடன் பாக்கி வைத்துள்ளார். ஷர்மிளாவிடம் கிட்டத்தட்ட ரூ.133 கோடி சொத்துக்களும், அவரது கணவர் அனில் குமாரிடம் ரூ.49 கோடி சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் கணவர் அனில் குமாரும் தனது மனைவிக்கு கிட்டத்தட்ட ரூ.30 கோடி கடன் பாக்கி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ஷர்மிளா கூறும்போது,’ஜெகன் மோகன் ரெட்டி எனக்கு கடன் கொடுத்தார் என்று சேர்க்கப்பட்டுள்ளது எதற்காக என்றால் எந்த சகோதரனும் தன் சகோதரிக்கு குடும்ப சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும். ஏனென்றால் அது அவளுடைய உரிமை. அது அண்ணனின் பொறுப்பு என்பதை குறிப்பிடத்தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் சகோதரிக்கு சொற்ப தொகையை கொடுத்து கடனாகக் காட்டுவார்கள். இது எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு ரூ.529 கோடி சொத்து; ரூ.82 கோடி கடன் வாங்கிய தங்கை ஷர்மிளா appeared first on Dinakaran.

Related Stories: