போதிய வசதிகள் இருப்பதாக கூறிவிட்டு நீரிழிவு மருத்துவரை நியமிக்க இப்போதுதான் நடவடிக்கையா? டெல்லி திகார் சிறை நிர்வாகம் மீது ஆம் ஆத்மி மீண்டும் குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மாதம் 21ம் தேதி கைது செய்யப்பட்டுள்ள அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீரிழிவு நோயாளியான கெஜ்ரிவாலுக்கு சிறையில் இன்சுலின் தரப்படவில்லை எனவும், குடும்ப டாக்டரின் ஆலோசனை பெற அனுமதிக்கவில்லை எனவும் சிறையிலேயே கெஜ்ரிவாலை மெல்ல மெல்ல கொல்ல சதி நடப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சி தலைவரும் மாநில சுகாதார அமைச்சருமான சவுரப் பரத்வாஜ் நேற்று முன்தினம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்நிலையில், நேற்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘‘சிறையில் நீரிழிவு நோயாளிகளுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் இருப்பதாக திகார் சிறை நிர்வாகம் கூறியது. ஆனால் கடந்த 20ம் தேதி தான் சிறைத்துறை டைரக்டர் ஜெனரல், திகார் சிறையில் நீரிழிவு மருத்துவரை நியமிக்க கோரி எய்ம்சுக்கு கடிதம் எழுதி உள்ளார். கெஜ்ரிவால் 20 நாளாக சிறையில் உள்ள நிலையில் இப்போதுதான் அவர்கள் நீரிழிவு மருத்துவரையே நியமிக்க நடவடிக்கை எடுக்கிறார்கள். கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் தேவை. மருத்துவ ஆலோசனை தேவை. இரண்டையும் மறுக்கிறது திகார் நிர்வாகம். இதன் மூலம் கெஜ்ரிவாலுக்கு சிறையில் மிகப்பெரிய தீங்கு விளைவிக்க சதி நடக்கிறது. ஆனால் பாஜவும், திகார் சிறை நிர்வாகமும் கெஜ்ரிவாலின் உடல் நிலை நன்றாக இருப்பதாக கூறுகின்றன’’ என்றார்.

இது குறித்து திகார் சிறை நிர்வாகம் அளித்த பதிலில், ‘‘எய்ம்ஸ் இல் இருந்து நீரிழிவு நிபுணர் வீடியோ அழைப்பு மூலம் கடந்த 20ம் தேதி கெஜ்ரிவாலிடம் பேசினார். அந்த அழைப்பில் திகார் சிறையின் மருத்துவ அதிகாரிகளும் இணைந்திருந்தனர். கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கோரிக்கையை ஏற்று இந்த வீடியோ அழைப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் 40 நிமிடம் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. கெஜ்ரிவாலுக்கு தற்போது தரப்படும் மருந்துகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம் என எய்ம்ஸ் மருத்துவர் பரிந்துரைத்துள்ளார். அவரது உடல்நிலையில் பயப்படும்படியாக எதுவுமில்லை என மருத்துவர் கூறி உள்ளார்’’ என கூறியுள்ளது. முன்னதாக டெல்லி கவர்னர் சக்சேனாவுக்கு திகார் சிறை நிர்வாகம் வழங்கிய அறிக்கையில், சிறைக்கு வரும் முன்பே கெஜ்ரிவால் இன்சுலின் எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டார் எனவும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post போதிய வசதிகள் இருப்பதாக கூறிவிட்டு நீரிழிவு மருத்துவரை நியமிக்க இப்போதுதான் நடவடிக்கையா? டெல்லி திகார் சிறை நிர்வாகம் மீது ஆம் ஆத்மி மீண்டும் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: