நீதித்துறையின் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்: மாவட்ட நீதிபதிகளுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: நீதித்துறை நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பாணை: தமிழகம் மற்றும் புதுச்சேரி நீதிமன்ற மாவட்ட நீதிபதிகள் நீதித்துறையின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தொடர்ந்து உறுதிப்படுத்த வேண்டும். தனிப்பட்ட முறையிலோ அல்லது அலுவலக ரீதியாகவோ தவறு செய்வதை தவிர்க்க வேண்டும். வழக்கறிஞர்களுடன் குறிப்பாக ஒரே நீதிமன்றங்களில் தொழில் செய்யும் வழக்கறிஞர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்க கூடாது. ஒவ்வொரு நீதிபதியும் பொதுமக்களின் பார்வையிலேயே உள்ளதால் அவர்கள் எந்த தவறையும் செய்யாமல் கவனமாக இருக்க வேண்டும்.

மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மொபைல் போன் மூலம் வழக்கறிஞர்களுடன் பேசுவது, தனது அறையில் தேவையில்லாமல் வழக்கறிஞர்களை சந்திப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகள் பிரச்னை இல்லாமல் தொடர்வது, பொது விஷயங்கள் தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகளுடன் பேசலாம். பணி நேரத்தில் தேவையில்லாமல் மொபைல் போனில் நீண்ட நேரம் பேசக்கூடாது. இந்த அறிவுறுத்தல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இந்த விஷயம் மிக தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும். இவ்வாறு அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.

 

The post நீதித்துறையின் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்: மாவட்ட நீதிபதிகளுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: