தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை அமைக்க ஒன்றிய அரசு நிர்ப்பந்தம் எலான் மஸ்க் இந்திய வருகை திடீர் ரத்து: அரசியல் ஆதாயம் தேட முயற்சித்த பாஜக அதிர்ச்சி

புதுடெல்லி: உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்க்குக்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம் உலகளவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகள் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ளன. இதற்கிடையே, இந்தியாவிலும் டெஸ்லா ஆலையை நிறுவன எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். அதன்படி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா அல்லது குஜராத் ஆகிய இடங்களில் மிகப்பெரிய மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தை அமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, அம்பானி நிறுவனத்துடன் இணைந்து மின்சார வாகனங்களை தயாரிக்க எலான் மஸ்க்கை வலியுறுத்தி வந்தன. இந்த பணிகளுக்காக அவர் நாளை இந்தியா வர திட்டமிட்டிருந்தார். ஆனால் அமெரிக்காவில் இருந்து கிளம்புவதற்கு சில மணிநேரத்தில் அவர் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார். இந்நிலையில் எலான் மஸ்க்கின் இந்த இந்திய பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டரில், ‘‘டெஸ்லாவில் பணிச்சுமை காரணமாக துரதிர்ஷ்டவசமாக இந்திய பயணம் தாமதமாகிறது. ஆனாலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியா செல்வேன்’’ என கூறி உள்ளார். அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பது பல யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. மேலும், குஜராத்தில் டெஸ்லா மின்சார கார் ஆலையை நிறுவ எலான் மஸ்க் விரும்பவில்லை என்றும், அவர் தமிழ்நாட்டில் ஆலையை அமைக்க முடிவு செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் ஒன்றிய அரசு குஜராத்தில் இந்த வாகன ஆலையை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதால் இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து இந்திய தொழில் முனைவோர் சங்க நிர்வாகி ரகுநாதன் கூறுகையில், ‘தமிழ்நாட்டில் டெஸ்லா கார் நிறுவன ஆலையை அமைக்க எலான் மஸ்க் விரும்பி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அதனை குஜராத்திற்கு மாற்றுமாறு அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளன. இதனால்தான் இந்திய பயணத்தை அவர் ரத்து செய்துள்ளார்’ என்றார். எலான் மஸ்க்கின் இந்திய வருகையை வைத்து மிகப்பெரிய அரசியல் ஆதாயத்தை அடைய பாஜவினர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதன்படி, மிகப்பெரிய மின்சார கார் தொழிற்சாலையை இந்தியாவில் அமைத்து தொழில் துறை வளர்த்தெடுக்க மோடி கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறார் என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் கட்டமைக்க பாஜவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது எலான் மஸ்க்கி வருகை ரத்து செய்யப்பட்டிருப்பதால் பாஜவினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டரில், ‘‘எலான் மஸ்க்கும் இந்தியாவில் ஆட்சி மாற்றத்திற்காக காத்திருக்கிறார். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் எங்களின் பிரதமர், மஸ்கை வரவேற்பார்’’ என கூறி உள்ளார்.

 

The post தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை அமைக்க ஒன்றிய அரசு நிர்ப்பந்தம் எலான் மஸ்க் இந்திய வருகை திடீர் ரத்து: அரசியல் ஆதாயம் தேட முயற்சித்த பாஜக அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: