கேரளாவில் பறவைக் காய்ச்சல் 21 ஆயிரம் வாத்துகள் கொன்று எரிப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழாவில் வாத்துக்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவியதை தொடர்ந்து 21 ஆயிரத்திற்கும் அதிகமான வாத்துக்களை கொன்று எரிக்கும் பணி நடந்து வருகிறது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் ஏராளமான வாத்து பண்ணைகள் உள்ளன. இங்கிருந்து தான் பல்வேறு பகுதிகள், தமிழ்நாட்டுக்கும் வாத்துகள், முட்டைகள் அனுப்பப்படுகின்றன. இந்தநிலையில் இங்குள்ள எடத்துவா, செருதனா பகுதிகளில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான வாத்துகள் திடீரென செத்தன.

இதுகுறித்து அறிந்ததும் கால்நடை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று பரிசோதனை நடத்தினர். இறந்த வாத்துகளின் ரத்த மாதிரி போபாலில் உள்ள பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடத்திய பரிசோதனையில் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டது. நோயை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க ஒன்றிய சுகாதாரத்துறை உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து நோய் பாதித்த பகுதியில் ஒரு கிமீ சுற்றளவில் வளர்க்கப்பட்டு வரும் வாத்துகள், கோழிகள், வளர்ப்புப் பறவைகளை கொல்ல தீர்மானிக்கப்பட்டது. அதன்படி பறவைகளை கொல்லும் பணி நேற்று காலை தொடங்கியது. இந்த பகுதிகளில் முதல்கட்டமாக 21,537 பறவைகளைக் கொல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. கால்நடை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கவச உடை அணிந்து பறவைகளை கொன்று தீ வைத்து எரித்து வருகின்றனர். பின்னர் அவை குழி தோண்டி புதைக்கப்பட்டன. நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு கிமீ சுற்றளவில் பறவைகளை விற்பதற்கும், இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post கேரளாவில் பறவைக் காய்ச்சல் 21 ஆயிரம் வாத்துகள் கொன்று எரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: