வாக்கு சாவடிகளில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

தஞ்சாவூர், ஏப். 17: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடிகளுக்கு தேவைப்படும் பொருட்களை தயார் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வாக்குச்சாவடிக்கு தேவைப்படும் பொருள்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பெட்டியில் எடுத்து வைக்கும் பணியில் பணியாளர்கள் தயார் செய்து வருகின்றனர். ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் 32 பொருட்கள் வைக்கப்படுகிறது. அதில் பேனா, பென்சில், ஸ்கேல், ஆண் பெண் பரிசை பதாகை, இன்குபேடு, ரப்பர் பேண்ட், மை, பேப்பர் உள்ளிட்ட தளவாட பொருட்கள் வைக்கப்படுகிறது. இவை அனைத்தும் தயார் செய்யப்பட்டு நாளை வாக்குப்பதிவு இயந்திரத்துடன் சேர்த்து தஞ்சை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 1710 வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட உள்ளது. அதேபோல் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு ஏதுவாக 92 சக்கர நாற்காலியும் அனுப்பப்படுகிறது.

வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை, சாய்தளம், மின்வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் மற்றும் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.இந்த நிலையில் முதற்கட்டமாக வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல், வாக்குச்சாவடியில் ஒட்டப்படும் ஸ்டிக்கர், முகவர்களின் கையேடு உள்பட பல்வேறு பொருட்கள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து பொருட்களும் விரைவில் தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து பிரித்து வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வரும் 19ம் தேதி அன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணியில் சிறப்பு காவலர்களாக பணியாற்றிட முன்னாள் படைவீரர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இப்பணிக்காக தங்களது பெயர்களை ஏற்கனவே பதிவு செய்துள்ள மற்றும் இப்பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் படைவீரர்கள் நாளை காலை 8 மணியளவில் தஞ்சாவூர் பழைய நீதிமன்ற சாலையில் உள்ள ஆயுதப் படை மைதானத்திற்கு தங்களது அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் நேரில் ஆஜராகுமாறு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

The post வாக்கு சாவடிகளில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: