24 வேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை

தர்மபுரி, ஏப்.17: தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில், இன்று(17ம் தேதி) மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. இறுதிக்கட்ட பிரசாரத்தில் 24 வேட்பாளர்களும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் (19ம்தேதி) நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிந்தது. தர்மபுரி தொகுதியை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி தனித்தனியாக தேர்தலை சந்திக்கின்றன.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் பாமக சவுமியாஅன்புமணி, நாம்தமிழர் கட்சி சித்தா மருத்தவர் அபிநயா இரண்டு பெண்கள் ஆவர். வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் கட்சிதலைவர்கள், வேட்பாளர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரசாரம் தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன் அதாவது இன்று (17ம் தேதி) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதனால் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி முழுவதும் இறுதிக்கட்ட பிரசாரம் நடந்து வருகிறது.

போட்டியிடும் 24 வேட்பாளர்கள் நேற்று கொளுத்தும் வெயிலில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். ஏற்கனவே தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் அமைச்சர் உதயநிதிஸ்டாலின், தமாக ஜிகே வாசன், திமுக பொதுச்செயலாளர் மற்றும் அமைச்சர் துரைமுருகன், காங்கிரஸ் தலைவர் செல்வம் பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு திரட்டினர். இன்று (17ம்தேதி) பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சவுமியா அன்புமணிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கிறார்.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தர்மபுரி,பென்னாகரம்,பாலக்கோடு,பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மேட்டூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் மொத்தம் 15 லட்சத்து 12 ஆயிரத்து 732 வாக்காளர்கள் உள்ளனர். 1,805 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 320 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடி என கண்டறியப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஒரு வாக்குச்சாவடிக்கு 2 பேலட் யூனிட் பயன்படுத்தப்படுகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 1784, 1784 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 1934 யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரியப்படுத்தும் விவிபாட் இயந்திரம் ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 670 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலூரில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தாலுகா அலுவலங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. அரசியல் க ட்சிகளின் முன்னிலையில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தப்பட்டு, பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த 14ம்தேதி வாக்குப்பதிவு அன்று வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தக்கூடிய முத்திரைகள், பென்சில், பேனா, 14 தாள்கள், மெழுகுவர்த்தி உள்ளிட்ட 84 வகையான பொருட்கள், தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக, தேர்தல் பாதுகாப்பு அறையில் இருந்து தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய வட்டாட்சியர் அலுவலகம் உதவி தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் அனுப்ப தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலக அதிகாரிகள் கூறியதாவது: தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நாள் அன்று வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் முத்திரைகள், பென்சில், பேனா, 14 தாள்கள், மெழுகுவர்த்தி உள்ளிட்ட 84 வகையான பொருட்கள் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அந்தந்த சட்டமன்றத் தொகுதிவாரி யாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

100 சதவீதம் பூத் சிலிப் விநியோகம் செய்யப்பட்டுவிட்டது. 18ம் தேதி(நாளை) மாலைக்குள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுவதும் போலீஸ் பாதுகாப்புடன் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 1805 வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இறுதிக்கட்ட பிரசாரத்தில் 24 வேட்பாளர்களும் கொளுத்தும் வெயிலையும், பொருட்படுத்தாமல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்றனர்.

The post 24 வேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை appeared first on Dinakaran.

Related Stories: