ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை

அரூர், ஏப்.17: தமிழகத்தில் நாடளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெறும் நிலையில், இன்று(17ம் தேதி) மாலையுடன் பிரசாரம் நிறைவு பெறுவதால், அரூர் பகுதியில் அரசியல் கட்சியினர் ஊர்வலம் மற்றம் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என உதவித் தேர்தல் அலுவலரான ஆர்டிஓ வில்சன் ராஜசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி 17ம் தேதி(இன்று) மாலையுடன் அரசியல் கட்சியினரின் பிரசாரம் முடிகிறது. இதையடுத்து, அனைத்து வகை தேர்தல் பிரசாரங்கள் முடிவுக்கு வருகிறது. அதற்கு பின்னர் ஊர்வலமாகவோ, பொதுகூட்டங்களாகவோ தனித்தனி குழுக்களாகவோ வாக்காளர்களை சந்திப்பது, பரப்புரை மேற்கொள்வது கூடாது. அதேபோல், மாலை 6 மணிக்கு மேல் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும். திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் கூட்டமாக எவரும் தங்குவதற்கு அனுமதி இல்லை. வாக்குச்சாவடிகளின் 200 மீட்டர் எல்லைக்குள் கட்சிகளின் கொடிகளோ, சுவர் விளம்பரச் சின்னங்களோ, பதாகைகளோ, தேர்தல் அலுவலகங்களோ ஏதும் இருக்கக் கூடாது. 200 மீட்டர் சுற்றளவிற்குள் இவைகள் கட்சியினரால் அகற்றப்பட வேண்டும்.

இல்லையெனில், அரசு அலுவலர்களால் அகற்றப்பட்டு விதி மீறலுக்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று வாக்குச்சாவடிகளை ஒட்டி, வாக்குப்பதிவிற்கு தடங்கல் ஏற்படுத்தும் வகையில் ஒலி பெருக்கிகள், மேள தாளங்கள், பட்டாசுகள் வெடிகள் எதையும் பயன்படுத்தக் கூடாது. வாக்குச்சாவடி மையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவிற்குள் வாக்காளர்கள் வரும் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மாற்றுத்திறனாளிகள், மூத்த வாக்காளர்கள், பெரும் நோயாளிகள் ஆகியோர் வாக்களிக்க வந்தால் அவர்களுக்கு சக்கர நாற்காலி வசதிகள் வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்தின் வெளியே, BLO எனப்படும் வாக்குச்சாவடி அலுவலர் பணியில் இருப்பார். பூத் ஸ்லிப் பெறாதவர்கள் அவரிடத்தில் சென்று பெற்றுக்கொண்டு வாக்களிக்கலாம். வெயில் கடுமையாக வாட்டுவதால், வாக்காளர்கள் நிழலில் நிற்பதற்கு, அமர்வதற்கு வசதியாக வாக்குச்சாவடி மையங்களுக்கு வெளியே ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் சாமியானா பந்தல்கள் அமைக்கப்பட உள்ளன. வாக்காளர்களுக்கு உரிய குடிநீர் வசதி, கழிவறை வசதி ஆகியவைகள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும். வாக்குச்சாவடி மையத்திற்குள் முகவர்கள், வாக்காளர்கள் என யாரும் மொபைல் போனை எடுத்துச்செல்ல அனுமதி கிடையாது. வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் பொதுமக்கள் அவசர உதவிகளுக்கும், தகவல்களுக்கும் அரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை(04346-221400), அரூர் வட்டாட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை(04346-296565), உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரான வருவாய் கோட்டாட்சியர்(9445461802) மற்றும் அரூர் வட்டாட்சியர்(9445000534) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை appeared first on Dinakaran.

Related Stories: