பணியின்போது உயிர் நீத்த தீயணைப்புத்துறை வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி

 

திருப்பூர்,ஏப்.16: இந்தியா முழுவதும் பணியின்போது உயிர் நீத்த தீயணைப்புத்துறை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.தமிழ்நாடு தீயணைப்பு மீட்புபணிகள் துறையில் தீ விபத்து மற்றும் மீட்பு பணியின் போது உயிர் நீத்த அலுவலர்கள், பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் நாள் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி திருப்பூர் குமார் நகரில் உள்ள தலைமை தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் நிலையத்தில் நடைபெற்ற நீத்தார் நினைவு நாள், தீத் தொண்டு நாள் வார விழா நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அண்ணாதுரை தலைமை வகித்தார். உதவி மாவட்ட அலுவலர் இளஞ்செழியன், உதவி மாவட்ட அலுவலர் வீரராஜ், தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள், அலுவக பணியாளர்கள் ஆகியோர் நினைவு சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதே போல் பொதுமக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் தீ தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தீயணைப்பு துறையினர் வழங்கினர். இதேபோல் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் நேற்று நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மேலும், ஒரு வார காலத்திற்கு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீயணைப்பு துறையின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பணியின்போது உயிர் நீத்த தீயணைப்புத்துறை வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: