கடந்த மார்ச் 30ம் தேதி பாஜ தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்தனர். ஏப்.14ம் தேதி அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த 14 நாட்களில் 15 லட்சம் பரிந்துரைகளை பரிசீலனை செய்ததாக கூறுகின்றனர். அதற்கு கின்னஸ் புத்தகத்தில் அவர்களுக்கு இடம் தர வேண்டும்.
தேர்தல் அறிக்கையில் அரசின் நடப்பு திட்டங்களை, புதிய திட்டங்களாக, புதிய அறிவிப்புகளாக சொல்லியுள்ளனர். புதிய பாதை, புதிய அறிவிப்புகள் இல்லை. இந்தியாவில் ஏழ்மை அகன்று விட்டது என நிதி ஆயோக் தெரிவிக்கிறது. 5 சதவீத மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனர் என அதன் செயல் அதிகாரி தெரிவிக்கிறார். 5 கோடி மக்கள் மட்டுமே வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்தால் ஏன், 80 கோடி மக்களுக்கு அதாவது 16 முதல் 20 கோடி குடும்பங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இலவச ரேசனாக 5 கிலோ அரிசி அல்லது 5 கிலோ கோதுமை தர வேண்டும்? வழங்குவதை நான் வரவேற்கிறேன். ஆனால் தருவது என்பது எதை காட்டுகிறது. இன்னும் ஏழ்மை உள்ளது. 5 சதவீதம் தான் ஏழ்மை என ஏற்றுக்கொள்ள முடியாது. சாதிவாரி, பொருளாதார கணக்கெடுப்பு நடத்தினால் தான் உண்மையான தொகை, எண்ணை கண்டுபிடிக்க முடியும்.
கல்விக்கடன் ரத்து செய்ய முடியாது என பாஜ கூறுகிறது. ஏன் முடியாது? மொத்த நிலுவையில் உள்ள கல்வி கடன் ₹11 ஆயிரத்து 122 கோடி. அதில் ₹4,124 கோடி வராக்கடனாக உள்ளது. ₹11 ஆயிரத்து 122 கோடியை தள்ளுபடி செய்ய முடியாதா?. கடந்த 9 ஆண்டுகளில் பாஜ அரசு பெரும் முதலாளிகள் வங்கியில் வாங்கிய ₹10 லட்சத்து 41 ஆயிரத்து 974 கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இதனை ரத்து செய்ய முடியும் என்றால் ஏன் கல்வி கடனை ரத்து செய்ய முடியாது?. இரண்டு பெரிய ஆபத்துகள் காத்திருக்கின்றன. ஜனநாயகம், சகிப்புத்தன்மை, சகவாழ்வு, மதச்சார்பின்மைக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல், பொதுசிவில் சட்டம் இவை இரண்டும் பெரிய ஆபத்து. மக்களை பிளவுப்படுத்தி விடும்.
இந்தியாவை சர்வாதிகார பாதைக்கு அழைத்து சென்றுவிடும். ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் நரேந்திரமோடி நிரந்தர மோடியாகிவிடுவார். ஒரு கட்சி தான் இருக்கும். மற்ற கட்சிகள் எல்லாம் அழிக்கப்பட்டு விடும். பாஜ தேர்தல் அறிக்கையில் இதனை சொல்லியுள்ளார்கள். மிகுந்த எச்சரிக்கையாக மக்கள் வாக்களிக்க வேண்டும். பாஜவையும், அவர்களின் தேர்தல் அறிக்கையையும் மக்கள் நிராகரிக்க வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 39 இடங்களிலும் வெற்றி பெறும். இவ்வாறு வர் கூறினார்.
கட்டாத வீடுகளுக்குகணக்கு காட்டுவார்கள்
ப.சிதம்பரம் கூறுகையில், ‘‘4 கோடி இலவச வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 கோடி வீடுகள் கட்டப்படும் என அறிவித்துள்ளனர். இந்தியாவில் 766 மாவட்டங்கள் உள்ளன. அப்படி 4 கோடி வீடுகள் கட்டியிருந்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 52 ஆயிரம் வீடுகள் கட்டியிருக்க வேண்டும். சிவகங்கையில் 52 ஆயிரம் வீடுகள் கட்டியுள்ளார்களா என காட்ட வேண்டும். கணக்கில் கட்டியதாக எழுதி விடுவார்கள்’’ என்றார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல், பொதுசிவில் சட்டம் இவை இரண்டும் பெரிய ஆபத்து. மக்களை பிளவுப்படுத்தி விடும். இந்தியாவை சர்வாதிகார பாதைக்கு அழைத்து சென்றுவிடும். ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் நரேந்திரமோடி நிரந்தர மோடியாகிவிடுவார்.
குழாயில் தண்ணீரே வரல… காஸ் எங்கிருந்து வரும்?
‘‘அனைத்து வீடுகளுக்கும் சமையல் எரிவாயு பைப் மூலம் அனுப்பப்படும் என கூறுவது வேடிக்கையானது. அனைத்து ஊர்களுக்கும் குழாய் மூலம் தண்ணீரே வரவில்லை. பிறகு எப்படி குழாய் மூலம் எரிவாயு வரும்? உஜ்வாலா திட்டத்தின் மூலம் இலவச காஸ் இணைப்பு வழங்கி உள்ளனர். இதன் பயனாளிகள் ஆண்டுக்கு 9 முதல் 12 சிலிண்டர்களை பயன்படுத்த வேண்டும். ஆனால் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக சராசரியாக உஜ்வாலா திட்டத்தின் பயன் பெற்றவர்கள் 3.7 சிலிண்டர்கள் தான் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் குழாய் மூலம் அனைத்து வீடுகளுக்கும் சமையல் எரிவாயு அனுப்புவேன் என கூறுவது மிகப்பெரிய வேடிக்கை’’ என்று ப.சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.
தேர்தலுக்காக விடப்பட்ட புதிய கரடி ஓடவில்லை
ப.சிதம்பரம் கூறுகையில், ‘நாடாளுமன்ற தேர்தலுடன் ஜம்மு காஷ்மீருக்கும் தேர்தல் நடத்தி இருக்கலாமே? ஐம்மு காஷ்மீருக்கு தேர்தலுக்கு நாள் குறிக்க வேண்டும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தமிழ்நாடு முழுவதும் பரவி உள்ளது. மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. கச்சத்தீவு குறித்து பொய் சொன்னவர்கள் ஏன் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கவில்லை. 10 ஆண்டுகள் பிரதமர் கச்சத்தீவு குறித்து பேசாமல் திடீர் என தேர்தலுக்காக ஒரு புதிய கரடி விட்டனர். இந்த புதிய கரடி தமிழ்நாட்டில் ஓட மறுத்து விட்டது. அதனால் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை என நினைக்கிறேன்’ என்றார்.
The post பெரு முதலாளிகளின் ₹10.41 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்ய முடியும்… கல்வி கடன் ₹11,122 கோடி தள்ளுபடி செய்ய முடியாதா; பாஜ தேர்தல் அறிக்கையை அங்குலம் அங்குலமாக அலசி ப.சிதம்பரம் கேள்வி appeared first on Dinakaran.