அறிவாலயத்தில் கேப்டன்; தொண்டர்கள் மகிழ்ச்சி

 

அடுத்த மாசம் எலக்சன் தேதிய தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்காங்கன்னு ஒரு பக்கம் செய்தி. இந்த கட்சி அந்த கட்சி கூட கூட்டணி பேசுது; அந்த கட்சி இந்த கட்சிகூட பேச்சுவார்த்த நடத்துதுன்னு இன்னொரு பக்கம் செய்தி. ஒருத்தரு தை, மாசி, பங்குனின்னு மிச்சரு சாப்பிட்டு மாசத்த கழிச்சிட்டு இருக்காருன்னு ஒரு பக்கம் தொண்டர்களோட புலம்பல் இருக்கு. இதையெல்லாம் தாண்டி பனையூரில் இருந்து தன்னோட உச்சத்த எல்லாம் உதறி தள்ளிட்டு மாசத்துக்கு ஒருமுறை வருவாரு, பேசுவாரு. கூட்டத்துக்கு வந்த ஆயிரம் தொண்டர்ல 990 பேர் பத்திரமா வீட்டுக்கு போயிடுவாங்க. 10 பேரு கூட்டத்துல நசுங்கி மூச்சு விட சிரமப்பட்டு ஆஸ்பிட்டலுக்கு போயிடுவாங்க. இது ஒரு பக்கம். இப்படி அரசியல் களத்துல அதிரடிக்கு பஞ்சம் இல்லாம, அனல் பறக்குற வேலையில காலையிலேயே கேரா இருக்குன்னு ஒரு மோர அடிச்சிட்டு நேரா வண்டிய விட்ட இடம் தான் அண்ணா அறிவாலயம். எப்பவும் பரபரப்பா இருக்குற இடத்துல இன்னும் கூடுதலா திடீர்னு மாநாடு மாதிரி ஒரே கூட்டம் அலமோதி இருந்துச்சு. சட்டப்பேரவைல இடைக்கால பட்ஜெட் நடக்குது. சி.எம் வண்டி அறிவாலயம் வாசலில் நிற்க, கருப்பு – சிவப்பு – மஞ்சள் கொடி பொருத்திய தேமுதிக காரும் கூடவே இருந்தப்போ நம்ம உள்ள புகுந்து என்னன்னு விசாரிச்சோம். அப்பதான் திமுக கூட்டணியில தேமுதிக சேந்துட்டாங்கன்னு தெரிய வந்துச்சி.

காலைலயே ஷாக்கு மேல ஷாக்கு. அறிவாலயம் உள்ளே திமுக சார்புல முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு, கனிமொழி, தேமுதிக சார்புல பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், பார்த்தசாரதி இப்படி தங்களோட கட்சி நிர்வாகிகள் முன்னிலைல பரஸ்பர கூட்டணிய உறுதி செஞ்சாங்க. ஒரு 30 நிமிசம் கழிச்சி பிரேமலதா விஜயகாந்த் வெளியே நிருபர்கள சந்திக்க வரும்போது அப்படி ஒரு ஆனந்தம். தேமுதிக தொண்டர்களும் இந்த கூட்டணிக்காக தான் காத்திட்டு இருந்தோம் அப்படின்னு பேச்சு அடிபட, நிருபர்களை சந்திச்ச பிரேமலதா விஜயகாந்த் ‘‘இந்த கூட்டணி அமைய வேண்டும்னு தொண்டர்களின் விருப்பம். விஜயகாந்த் இருக்கும் போதே 2016ல திமுக – தேமுதிக கூட்டணி உருவாக வேண்டியது. ஆனா பத்து வருசத்துக்கு அப்புறம் கொஞ்சம் தாமதமா உருவாகி இருக்கு. இருந்தாலும் மக்களிடையே இருக்குற வரவேற்பால கண்டிப்பா இந்த கூட்டணி 200 தொகுதிக்கு மேல நிச்சயமா ஜெயிப்போம்’’. அப்படின்னு அவங்க சொல்லிட்டு போயிட்டாங்க.

இருந்தாலும் நமக்கு சில சந்தேகம் அத கிளியர் பண்ணணும்னு நினைச்சோம். அங்க இருந்த தேமுதிக நிர்வாகி கிட்ட பேச்சுக்கொடுத்தோம். வணக்கம் அண்ணே திமுக – தேமுதிக கூட்டணி அமைச்சிருக்கு எப்படி பாக்குறீங்க?
தேமுதிக காரர்: ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. நாங்க நினைச்ச கூட்டணி; விருப்பப்பட்ட கூட்டணி இது தான். கலைஞர் இருக்கும்போதே எங்க தலைவர் விஜயகாந்த் கூடலாம் பேச்சுவார்த்தை நடத்துனாங்க. பழம் நழுவி பால்ல விழும்னு அவரும் சொன்னாரு. ஆனா சிலரோட சூழ்ச்சியால அப்போ அமையல, இப்போ அமைஞ்சிடுச்சி. உங்கள மாதிரி டிவி காரங்க எப்போது கூட்டணி, யாருக்கூட கூட்டணின்னு கேட்டுட்டே இருந்தீங்க. உங்க எல்லாருக்கும் இந்த வெற்றி கூட்டணியை அறிவிக்க தான் இவ்வளவு நாள் காத்திட்டு இருந்தோம். அது சரி அண்ணே… நேத்து வரை அதிமுக கூட்டணில தேமுதிக சேரும்னு இபிஎஸ் நம்பிக்கையா இருக்க, அவங்களும் மாநிலங்களவை உறுப்பினர் தரதா உறுதி கொடுத்து இருந்தாங்க.

இப்போ திமுக கூட கூட்டணி எப்படி? தேமுதிக காரர்: அட போங்க தம்பி, அவங்கள நம்பி தான் நாங்க இந்த நிலைக்கு வந்துட்டோம். சொல்றது ஒன்னு செய்யுறது ஒன்னு. 2024 எம்.பி எலக்சென்ல ஒரு நியமன உறுப்பினர் பதவி தரோம்னு சொல்லிட்டு கூட்டணி வச்சி எங்களுக்கு நம்பிக்கை துரோகத்த செஞ்சிட்டாங்க. அதுக்கு அப்புறம் உறுதி அளிச்சா என்ன? அளிக்கலனா என்ன? இப்படி அவரு சொல்லிட்டு கிளம்பிட நாம நேரா அறிவாலயம் உள்ேள போனோம். அங்க திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலையை நேர்ல சந்திச்சி எத்தனை சீட்டு கன்பார்ம் அண்ணேன்னு கேட்க அவரு (7+1) 7 சட்டமன்ற தொகுதி, ஒரு மாநிலங்களவை எம்.பி முடிவாகி இருக்கலாம் தம்பி. ஆனா, எனக்கு உறுதியா தெரியல. தலைமை தான் எல்லாம் முடிவு செய்யும். அவரு ஒரு மழுப்பலா பதில நம்ம கிட்ட சொல்ல, நாம சரி அண்ணே நன்றி வணக்கம்னு சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பிட்டோம். அறிவாலயம் வெளியே திமுக காரர் ஒருத்தர் கிட்ட அடுத்தக்கட்ட திமுக தேர்தல் நடவடிக்கை என்ன அப்படின்னு கேட்க, திமுக காரர்: வணக்கம், என்னோட பேரு காமராஜ். நமக்கு ஊரு வேதாரண்யம் தம்பி. நான் அதிமுகவுல 2011-2016 ல வேதாரண்யம் எம்.எல்.ஏ. இந்த தடவ சீட்டு கேட்டு இருக்கேன்.

எல்லாம் தலைவர் முடிவு தான். கண்டிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்துல 3 தொகுதி இருக்கு. இதுல எல்லாத்துலையும் திமுக – கூட்டணி கட்சி கண்டிப்பா ஜெயிக்கும். எங்க தொகுதி வேதாரண்யத்துல இரண்டு ஒன்றியம் தான் இருக்கு. அத மூனு, இல்ல நாலா பிரிக்கணும் தம்பி. தலைமை ஒரு ஒன்றியத்துக்கு 30 பூத் கமிட்டி போடலாங்கிறாங்க. ஆனா, இருக்குற இரண்டு ஒன்றியத்துல 130 பூத் கமிட்டி இருக்கு. வேலைப்பளு அதிகமாக இருக்கு. அதனால தான் தலைமை கிட்ட இது சம்மந்தமான பெட்டிசன் கொடுத்து இருக்கோம். கூட்டணிக்கு தேமுதிக புது வரவா இருக்கு. ஆனா, இந்த காங்கிரஸ் காரவுங்க தான் புடிமானமா இருக்கமாட்றாங்க. மத்தபடி நாம இந்த முறை கண்டிப்பா ஜெயிப்போம். இன்னைக்கு நம்ம தலைவர் அடிச்ச ஸ்டோக் இருக்கே… அதுதாம்பா மாஸ்டர்ஸ்டோக். அவரு அப்படி சொல்லிட்டு கிளம்ப நாம வழக்கம் போல அடுத்த கட்சி ஆபீஸ பாத்து நடைய கட்டிட்டோம்.

 

Related Stories: