தமிழகத்தின் முதல் முதலமைச்சர் கடலூர் சுப்புராயலு ரெட்டியார்

 

தமிழகத்தில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முதலமைச்சர் என்ற பெருமையைப் பெற்றவர் கடலூர் சுப்புராயலு ரெட்டியார். கடலூர் வட்டம் மலையபெருமாள் அகரம் (எம்.பி. அகரம்) கிராமத்தைச் சேர்ந்த இவர் 1906 முதல் 1920ம் ஆண்டு வரை கடலூர் முனிசிபல் சேர்மன், தென்னாற்காடு ஜில்லா போர்டு தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார். காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வந்த நிலையில் அக்கட்சியிலிருந்து விலகி, 1916ம் ஆண்டு நீதிக்கட்சியில் இணைந்தார். 1919ம் ஆண்டு மாண்டேகு சேம்ஸ்போர்டு சட்ட சீர்திருத்தம் விளைவாக பிரிட்டிஷ் அரசால் இந்திய அரசுச் சட்டம்- 1919 இயற்றப்பட்டது. இதன்படி, மத்தியிலும் மாநிலத்திலும் இரட்டை ஆட்சி செயல்படுத்தப்பட்டது. இச்சட்டம், அரசு நிர்வாகத்தை இரண்டாகப் பிரித்தது. முக்கியமான பொறுப்புகளான சட்டம், நீதி, உள்துறை ஆகிய பொறுப்புகள் பிரிட்டிஷ் அதிகாரத்தின்கீழ் இருந்தன. உள்ளாட்சி, விவசாயம், கல்வி, சுகாதாரம், தொழில் போன்றவற்றை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசவையின் கீழ் செயல்
படுத்தினர்.

இதற்காக 1920ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. சென்னை மாகாணம் தற்போதைய சென்னை மாகாண சட்டசபைக்கு மொத்தம் உள்ள 127 உறுப்பினர்களில் 98 பேர் மக்களால் தேர்வு செய்யப்பட்டனர். 29 பேர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நியமன உறுப்பினர்கள். 1920ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்ததால் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. நீதிக்கட்சி தேர்தலில் போட்டியிட்டு, 63 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இத்துடன் 18 நியமன உறுப்பினர்களின் ஆதரவுடன் 81 உறுப்பினர்களின் பலத்தை பெற்றது. இதனால் அக்கட்சியின் தலைவர் தியாகராஜ செட்டியாரை ஆட்சி அமைக்க கவர்னர் வெலிங்டன் அழைத்தார். இருப்பினும் அவர் தனது கல்லூரிகால நண்பரான சுப்புராயலு ரெட்டியாரை பரிந்துரை செய்தார்.

அதன்படி, 1920 டிசம்பர் 17ல் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராக சுப்புராயலு ரெட்டியார் பதவி ஏற்றார். கல்வி, சுங்கம், பொதுப்பணிகள் ஆகிய 3 துறைகளை சுப்புராயலு ரெட்டியார் கவனித்துக்கொண்டார். பனகல் அரசர் மற்றும் கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு ஆகிய 2 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். சுப்புராயலு ரெட்டியார் முதலமைச்சராக பதவி ஏற்ற சிறிது காலத்திலேயே அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் தனது பதவியை 1921ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி ராஜினாமா செய்தார். அன்றைய தினமே, புதிய முதலமைச்சராக பனகல் அரசர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சரான சுப்புராயலு ரெட்டியார் மொத்தம் 206 நாட்கள் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: