நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் முதல்முறையாக களம் இறங்கியுள்ளது. நடிகர் விஜய் கட்சி தொடங்கிய முதல் மாநாட்டிலேயே, திமுகவும் பாஜகவும் தனது எதிரிகள் என்று பிரகடனப்படுத்தி விமர்சித்து வருகிறார். அவரை வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தை வைத்து இந்த தேர்தல் நமக்கான தேர்தல் என தவெகவினர் தப்புக்கணக்கு போட்டு வந்தனர். இந்த நிலையில் வெயிட்டான கூட்டணியை அமைத்தால் தேர்தல் களத்தில் அசுர பலத்துடன் வலம் வரலாம் என்று நினைத்திருந்த விஜய், ‘கூட்டணி சேரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும்’ என்று அதிரடி ஆபரை வெளியிட்டார். விஜய் கொடுத்த கூட்டணி ஆட்சி ஆபர் அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதனால் தவெக கூட்டணிக்கு பல கட்சிகள் வரும் என்ற கனவில் கட்சியினர் மிதந்து கொண்டிருந்தனர். ஆனால் தமிழக தேர்தல் களத்தில் கிட்டத்தட்ட திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணிகளில் முக்கிய கட்சிகள் அனைத்தும் தங்கள் வருகையை உறுதி செய்துவிட்டன. இறுதியாக தேமுதிக யாருடன் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. தேமுதிகவும் திமுக கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டது. இதனால் முக்கிய கட்சிகள் அனைத்தும் கூட்டணியை இறுதி செய்துவிட்ட நிலையில் விஜய்யின் தவெக கூட்டணியில் இன்று வரை எந்த ஒரு கட்சியும் கூட்டணி சேரவில்லை. அதிரடி ஆபர் எல்லாம் கொடுத்தும் ஒன்னும் இல்லாமல் புஸ்வாணமாக போய்விட்டதே என தவெகவினர் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.
அதிமுகவுக்கு ராமதாஸ் எம்எல்ஏ தாவலா?
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து வரும் சூழலில் முக்கிய கட்சிகளில் தேமுதிகவும், ராமதாஸ் தலைமையிலான பாமகவும் மட்டுமே தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை உறுதி செய்யாமல் இருந்தன. இந்த நிலையில் தேமுதிகவை திமுகவில் இணைத்து பாஜக-அதிமுக கூட்டணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த சூழ்நிலையில் ராமதாஸ் மட்டுமே இன்னும் எந்த முடிவும் எடுக்க முடியாமல் இழுபறியில் உள்ளார். திமுக கூட்டணியில் அவருக்கு கதவு மூடப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் அன்புமணி பாமக இருப்பதால் அங்கும் செல்ல முடியாமல் தவிப்பில் உள்ளார். முக்கிய கூட்டணியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் தற்போது கூட்டணி முடிவாகாததால் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராமதாஸ் தரப்பைச் சேர்ந்த எம்எல்ஏவான அருள், சட்டமன்ற கூட்ட தொடரின் இடையே தலைமை செயலகத்தில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசியது தற்போது பேசுபொருளாக மாறி உள்ளது.
அதுமட்டுமல்லாமல் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரையும் அவர் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இவரது சந்திப்பு ஜி.கே.மணிக்கு தெரியாதாம். அருளின் இந்த சந்திப்பு ராமதாஸ் தரப்பினர் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாம். ராமதாஸ் தரப்பில் பிரச்சனைகள் எழுவதால் அதிமுகவில் இணைந்து விடும் முடிவுக்கு அருள் வந்திருக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. இது ராமதாஸ் தரப்பை கடுமையாக அதிர்ச்சியடையச் செய்துள்ளதாம். ஆனால் அப்படி எதுவும் இல்லை என்று தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார் அருள் எம்எல்ஏ.
இப்படி அடிச்சா? எப்படி?
கடந்த சில நாட்களாக மதுரை திருமங்கலம் ெதாகுதி சிட்டிங் எம்எல்ஏவான ஆர்.பி.உதயகுமார், அதிமுக கூட்டந்தோறும் பல பேருக்கு என் தொகுதி மீது கண்ணாக இருக்கிறது. என்னை தோற்கடிக்க துடிக்கின்றனர். அதையெல்லாம் மீறி தொண்டர்கள் அன்பால் ஜெயிக்கிறேன் என பேசி வருகிறார். மறுபுறம் நமக்கு மதுரை மேற்கா? வடக்கா? தெற்கான்னு தெரியலையே என புலம்பி வரும் செல்லூர் ராஜூ, எல்லாத்தையும் மேல இருப்பவர் முடிவு செய்வார் என எடப்பாடியை கைகாட்டி பவ்யமாக இருக்கிறார். இவரும், ‘நான் தோற்றால் ரொம்ப பேரு சந்தோஷப்படுவாங்க… அதற்கான முயற்சிகளும் செய்றாங்க’ என தன் பங்குக்கு புலம்பி வருகிறார்.
2 மாஜி அமைச்சர்களுமே பெரும்பாலும், தூங்கா நகரில் ஒருங்கிணைந்து பணியாற்றுவதில்லை. ஏற்கனவே ஏழாம் பொருத்தம். மற்றொரு அதிமுக எம்எல்ஏவான ராஜன் செல்லப்பாவும் தனி முகமாகவே செயல்படுகிறார். இவர்களுக்குள் இருக்கும் உள்குத்து மோதலே இப்படி மாஜி அமைச்சர்களின் பேச்சாக வெளிப்படுகிறதாம். இது தெரியாமல் எதிர்க்கட்சியை சொல்றாரோன்னு நினைச்சுட்டோமேன்னு அதிமுகவினரே புலம்புகின்றனர்.
புதுச்சேரியில் சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’
கடந்த சட்டமன்ற தேர்தல் போல் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரசுக்கு 16 தொகுதிகள் என்பது உறுதியாகிவிட்டது. தற்போது என்.ஆர்.காங்கிரசில் 10 சிட்டிங் எம்எல்ஏக்கள் இருந்து வருகின்றனர். இதில் பாதி பேருக்கு மீண்டும் சீட் கிடைக்காது என்ற தகவல் அக்கட்சி வட்டாரத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சிட்டிங் எம்எல்ஏக்கள் தவிப்பில் இருந்து வருகின்றனர். மேலும், என்.ஆர்.காங்கிரஸ் வென்ற தொகுதிகளை கூட்டணியில் உள்ள பாஜ கேட்பதால் பிரச்னை இன்னும் அதிகமாக உள்ளது. இந்த கூட்டணியில் எந்தந்த கட்சிக்கு எந்த தொகுதி என்பதே வேட்பு மனு தாக்கல் துவங்கும் முதல் நாள் தான் முடிவு ஆகும் போல இருக்கு.
தொகுதி முடிவான பிறகு சேலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமிக்கு முதல்வர் ரங்கசாமி சென்று அருள்வாக்கு கேட்டபிறகு யார் யாருக்கு மீண்டும் எம்எல்ஏ சீட் என்பது தெரியவரும். வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளுக்கு முதல்நாள் திடீரென வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்வது தான் வழக்கமான நடைமுறையாக கடைப்பிடித்து வருகிறார் ரங்கசாமி. அதன்பிறகு சிட்டிங் எம்எல்ஏக்களும் வேறு கட்சிக்கு சென்று சீட் கேட்க முடியாத நிலை ஏற்படும். இதனால் சிட்டிங் எம்எல்ஏக்கள், தினமும் அவர் வீட்டுக்கு சென்று அவரை சுற்றிசுற்றி வருகின்றனராம்.
