தமிழ்புத்தாண்டை முன்னிட்டு புதுக்கோட்ைட கோயில்களில் சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டை, ஏப்.15: தமிழ்ப் புத்தாண்டையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் மாதங்களில் சித்திரை மாதம் முதல் தேதி தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்ப்புத்தாண்டையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் வரிசைக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும் கோயிலில் நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள சாந்தநாத சாமி கோயில், விநாயகர் கோயில்கள், பாலதண்டாயுதபாணி, வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆதனக்கோட்டையில் பதினெட்டு முனீஸ்வரர் கோயிலில் உள்ள பதினெட்டுமுனி, மோட்டுமுனி, ஈரல்புடுங்கிமுனி, மகாமுனி உள்ளிட்ட சுவாமிகளுக்கு அபிஷேகம், ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கீரமங்கலம் மெய்நின்ற நாதசுவாமி கோயில் மற்றும் செரியலூர் தீர்த்தவிநாயகர் கோயில், சேந்தன்குடி நகரம் பாலசுப்பிரமணியர் கோயில், மேற்பனைக்காடு, கொத்தமங்கலம், பனங்குளம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் உள்ள விநாயகர் கோயில்கள், அம்மன் கோயில்கள், சிவன் கோயில்களில் சித்திரை மாத முதல் நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. குளமங்கலம் பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோயிலில் சிறப்பு வழிபாடுகளுடன் மாலைகள் அணிவித்து பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர். திருவரங்குளம் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோயில், பிடாரி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோயில், திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் மங்கள நாயகி அம்பாள் கோயில், சுந்தர மாகாளி அம்மன் கோயில், வேப்பங்குடி முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வடகாடு அருகேயுள்ள மாங்காடு விடங்கேஸ்வரர் கோயிலில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கீரனூர் பகுதிகளிலுள்ள சிவன் கோயில், தேரடி கருப்பு கோவில், ஆஞ்சநேயர் கோயில், கொங்காணிகருப்பர் கோயில், களமாவூர் அக்னீஸ்வரர் கோயில், குளத்தூர் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கீரனூர் தேரடி கருப்பர் சாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

The post தமிழ்புத்தாண்டை முன்னிட்டு புதுக்கோட்ைட கோயில்களில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: