தபால் வாக்குச் சீட்டை சமூக வலைதளங்களில் பகிர்ந்த 2 பேர் மீது வழக்கு

தேனி, ஏப்.14: தேனி நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாக்குப்பதிவிற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தபால் வாக்கு சீட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்கப்பட்டு வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. கடந்த 11ந்தேதி போடி அருகே சிலமலை பகுதியைச் சேர்ந்த விக்கிதேவன் என்ற நபர் தனது முகநூல் பக்கத்தில் முதல் வெற்றி வாக்கு என்ற தலைப்பில் தபால் வாக்கு பதிவு செய்த புகைப்படத்தினை பகிர்ந்தார். அதேபோல் குமணன்தொழு பகுதியை சேர்ந்த சிவமாயன் என்பவரும் தபால்வாக்கு செலுத்திய புகைப்படத்தை பதிவிட்டு பகிர்ந்தார்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் படி, வாக்கை பதிவுசெய்து, புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களான வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தெரியப்படுத்துவது அல்லது வேறு எந்தவகையிலும் யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பதை தெரியப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவது குற்றமாகும்.

எனவே, சமூக வலைதளங்களில் தபால்வாக்கு சீட்டை பகிர்ந்த இந்த இரண்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் எஸ்பியிடம் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், தபால்வாக்கு சீட்டை புகைப்படம் எடுத்து அனுப்பிய நபர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post தபால் வாக்குச் சீட்டை சமூக வலைதளங்களில் பகிர்ந்த 2 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: