தேர்தல் பணிகளுக்கு இரண்டாம் நிலை அலுவலர்களை கூடுதலாக நியமிக்க கோரிக்கை

தேனி, ஏப்.14: தமிழகம் முழுவதும் ஏப்.19ல் மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இப்பணிக்காக வாக்குச்சாவடிகளில் பல்வேறு நிலை அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். இவர்கள் அனைவரும் வாக்குப்பதிவிற்கு முதல் நாள் வாக்குச்சாவடி செல்ல உள்ளனர். வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்ற வாக்குச்சவாடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் 1, 2 மற்றும் 3, நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் மட்டும் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் 6 ஆயிரத்திற்கும் அதிகமான அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.

இவர்களுக்கு ஏற்கனவே மூன்றாம் கட்டமாக திருப்புதல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் வாக்குப்பதிவு அலுவலர்-2ன் பணி மற்ற அலுவலர்களின் பணிகளை விட மிக அதிகமாக உள்ளது. இந்த அலுவலர்கள் 17(அ) பதிவேடு பராமரித்தல், அழியாத மை வைத்தல், வாக்காளர் ரசீதில் கையொப்பமிட்டு வழங்குதல் என பல்வேறு பணிகளை செய்யவேண்டியுள்ளது.

குறிப்பாக 17(அ) பதிவேடு மிக முக்கியமான பதிவேடு என்பதால் அதில் வாக்காளர் வாக்களிக்கப் பயன்படுத்தும் அடையாள அட்டையின் எண்னை எழுதுவதோடு, வாக்காளரிடம் கையொப்பமும் பெறவேண்டும். 17(அ) பதிவேடு சட்டப்பூர்வமான மிகமிக முக்கிய ஆவணம் என்பதால் பதிவுகள் விடுதலின்றி துல்லியமாகவும், அடித்தல் திருத்தலின்றி பதிவு செய்தல் வேண்டும்.

அதன் பின் அழியாத மையை விரலில் வைத்துவிட்டு வாக்காளர் ரசீதில் விபரங்களை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு வழங்க வேண்டும். இறுதியில் வாக்காளர் வாக்களிக்க விருப்பம் இல்லையென்றால் அதற்கான பதிவுகளையும் மேற்கொள்ள வேண்டும். இவையனைத்தும் ஒரே அலுவலர் மேற்கொள்வதால் பணிச்சுமை ஏற்படும் எனவும், வாக்குப்பதிவில் காலதாமதத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வாக்குப்பதிவு-2 அலுவலர்களை கூடுதலாக நியமனம் செய்ய வேண்டும் எனவும் அலுவலர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. தேனி நாடாளுமன்ற தொகுதியைப் பொருத்தவரை, தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி வட்டத்தில் 278 பேரும், பெரியகுளம் வட்டத்தில் 261 பேரும், உத்தமபாளையம் வட்டத்தில் 406 பேரும், போடிநாயக்கனூர் வட்டத்தில் 207 பேரும், தேனி வட்டத்தில் 318 பேரும் இரண்டாம் நிலை அலுவலர்களாக பணியாற்றவுள்ளனர்.

The post தேர்தல் பணிகளுக்கு இரண்டாம் நிலை அலுவலர்களை கூடுதலாக நியமிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: