தேக்கடி ஏரியை நீந்தி கடந்த புலி படகு சவாரியில் பார்த்து ரசித்தனர்

கூடலூர், ஏப்.14: தேக்கடி ஏரியை புலி நீந்திக் கடந்த காட்சி படகு சவாரி சென்ற சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடிக்கு, இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். தேக்கடியில் யானைசவாரி, டைகர்வியூ, மூங்கில் படகு சவாரி என பலபொழுது போக்கு அம்சங்கள் இருந்தாலும், படகுச்சவாரியின் போது நீர்நிலைகளுக்கு வரும் யானைகள், மான்கள், காட்டு எருமை கூட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான பறவை இனங்களையும் காணலாம் என்பதால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விருப்பத்தில் படகு சவாரி முதலிடம் வகிக்கிறது.

தற்போது கோடை வெயில் காரணமாக வனப்பகுதியில் உள்ள குளங்கள், ஓடைகள் வறண்டு கிடப்பதால், வனவிலங்குகள் அடிக்கடி ஏரிக்கரையில் வந்து தண்ணீர் குடித்து செல்கின்றன. இந்நிலையில் நேற்று கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் படகில் சவாரி சென்ற சுற்றுலாப் பயணிகள் தேக்கடி ஏரியில் மணக்கவலை என்ற இடத்தில் புலி ஒன்று ஏரியில் நீந்தி மறுகரையை கடக்கும் காட்சியை கண்டனர். இதையடுத்து படகு ஓட்டுனர் புலி கரையேறி வனப்பகுதிக்குள் செல்லும் வரை படகை நிறுத்தினார். இதனால் புலி நீந்திச் செல்வதை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.

இதுகுறித்து படகு ஓட்டுனர்கள் கூறுகையில், “பெரியாறு புலிகள் சரணாலயத்தில் படகு சவாரியின் போது யானைகள், காட்டெருமைகள், மற்றும் காட்டுப்பன்றிகள் கூட்டமாக அடிக்கடி காணப்படும். அதே வேளையில், புலிகள் அரிதாகவே காணப்படும். சுற்றுலா பயணிகள் படகில் சத்தம் போடாமல் அமைதியாக இருந்ததால் படகிலிருந்த அனைவரும் புலியை பார்க்கவும், அதை புகைப்படம் எடுக்கவும் முடிந்தது. புலியும் மிக மெதுவாக வனப்பகுதிக்குள் புகுந்தது. இது படகு சவாரி செய்த பயணிகளுக்கு உற்சாகம் தந்தது’’ என்றனர்.

The post தேக்கடி ஏரியை நீந்தி கடந்த புலி படகு சவாரியில் பார்த்து ரசித்தனர் appeared first on Dinakaran.

Related Stories: