கேரட் விலை உயர்வு:கிலோ ரூ.60க்கு விற்பனை

 

ஊட்டி,ஏப்.13: ஊட்டி கேரட் விலை அதிகரித்துள்ள நிலையில், நீலகிரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ், பட்டாணி,வெள்ளை பூண்டு,முள்ளங்கி,முட்டைகோஸ்,காலிபிளவர் போன்ற காய்கறிகள் அதிகளவு பயிரிடப்படுகிறது.

குறிப்பாக, கேரட் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு கொண்டுச் சென்று விற்பனை செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கேரட் மேட்டுப்பாளையம், சென்னை, திருச்சி மற்றும் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களுக்கு அதிகளவு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன் ஒரு கிலோ கேரட் ரூ.20க்கு விற்கப்பட்ட நிலையில், விவசாயிகள் அறுவடை செய்வதில் தயக்கம் காட்டினர்.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக விலை படிப்படியாக உயர்ந்து தற்போது கிலோ ஒன்று ரூ.60 முதல் ரூ.70 வரை தரத்திற்கு ஏற்றவாறு விற்பனை செய்யப்படுகிறது. சாதாரணமாக கிலோ ஒன்றுக்கு ரூ.40 கிடைத்தாலே அதிகம் லாபம் என்ற நிலையில், தற்போது கிலோ ஒன்று ரூ.60 வரை கிடைப்பதால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைத்து வருகிறது. இதனால், எல்லையில்லா மகிழ்ச்சியில் விவசாயிகள் உள்ளனர். வறட்சி, விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கேரட் விலை உயர்வு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

The post கேரட் விலை உயர்வு:கிலோ ரூ.60க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: