மக்கள் தவறாமல் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.. ஜெ.ராதாகிருஷ்ணன் பாரா கிளைடிங் செய்து விழிப்புணர்வு..!!

சென்னை: சென்னையில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தற்போது தேர்தல் பிரச்சாரம் அடிக்கும் வெயிலை விட சூடுபிடித்துள்ளது.

தேர்தல் ஆணையம் சார்பாக வாக்குப்பதிவிற்கான பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது. வாக்குசாவடி மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு செய்தல், இவிஎம் இயந்திரங்களை சரிசெய்தல், வேட்பாளர்களுக்கான சின்னங்களை அச்சடித்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொறுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த முறை 100% வாக்குபதிவு என்ற இலக்கை நோக்கி தேர்தல் ஆணையம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சென்னை மாவட்ட தேர்தல் சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் திருவான்மியூர் கடற்கரையில் பாரா கிளைடிங் செய்து விழிப்புணர்வு நடத்தினார்.

வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், கல்லூரி மாணவர்கள், புதிய வாக்காளர்கள் கட்டாயம் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதுகுறித்து ராதாகிருஷ்ணன் பேசுகையில்; சென்னையில் 100 சதவீத வாக்குப் பதிவை கொண்டு வர 18 வகையான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. வெயில் பாதிப்பு இருப்பதால் பந்தல், குடிநீர் வசதி போன்றவை செய்யப்படுகின்றன. இதுவரை தபால் ஓட்டு 1,175 பதிவாகியுள்ளது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் நாளை வரை தபால் ஓட்டு போடலாம். மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி, 16 சட்டமன்ற தொகுதிகளிலும் பெரும்பாலான இடங்களில் முடிந்து விட்டது. இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

The post மக்கள் தவறாமல் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.. ஜெ.ராதாகிருஷ்ணன் பாரா கிளைடிங் செய்து விழிப்புணர்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: