பங்குனி பிரமோற்சவ விழா; மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வெண்ணைத்தாழி உற்சவம்

மன்னார்குடி: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனி பிரமோற்சவ பெருவிழாவின் முக்கிய விழாவான வெண்ணைத்தாழி உற்சவம் இன்று நடந்தது. கண்ணன் திருக்கோலத்தில் வந்த பெருமாள் மீது வெண்ணை வீசி பக்தர்கள் வழிபட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி கோயிலில் 18 நாள் பங்குனி பிரமோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. 16ம் நாளான இன்று (11ம் தேதி) காலை வெண்ணைத்தாழி உற்சவம் நடந்தது. இதையொட்டி பெருமாள், கண்ணன் கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

இதைதொடர்ந்து கோயிலை சுற்றியுள்ள நான்கு ராஜமாட வீதிகளிலும் பெருமாள் வீதியுலா சென்றார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு பெருமாள் மீது வெண்ணெய் வீசி வழிபட்டனர். பின்னர் வெண்ணைத்தாழி மணடபத்திற்கு சென்ற பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இன்று மாலை பெருமாள், ராஜ அலங்காரத்தில் தங்க வெட்டுங்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். கிருஷ்ணராக பெருமாள் அருள்பாலிக்கும் கோயிலில் அவரே தவழும் கண்ணனாக கையில் வெண்ணை குடத்தை ஏந்தி பல்லக்கில் வீதியுலா வந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரண்டு கிருஷ்ணருக்கு வெண்ணெய் கொடுத்தனர்.

பல்லக்கில் வரும் சுவாமி மீது பக்தர்கள் வெண்ணெய் வீசி வழிபடுவது இங்கு மட்டுமே நடந்து வருகிறது. டிஎஸ்பி அஸ்வத் ஆன்டோ ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் கரிகாற்சோழன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர்கள் குழுத்தலைவர் கருடர் இளவரசன், செயல் அலுவலர் மாதவன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முத்து மாணிக்கம், மனோகரன், நடராஜன், லதா வெங்கடேசன் செய்திருந்தனர்.

The post பங்குனி பிரமோற்சவ விழா; மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வெண்ணைத்தாழி உற்சவம் appeared first on Dinakaran.

Related Stories: