டிக்கெட் கிடைக்காததால் எந்த வருத்தமும் இல்லை; தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வுபெறுகிறேன்: காங். மூத்த தலைவர் வீரப்ப மொய்லி அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான வீரப்ப மொய்லி தேர்தல் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி. 82 வயதான வீரப்ப மொய்லி மாநிலத்தின் முதல்வராக இருந்தவர். 6 முறை எம்.எல்.ஏ-வாக இருந்த வீரப்ப மொய்லி, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் அமைச்சராக இருந்திருக்கிறார்.

கடந்த 2009 மற்றும் 2014 மக்களவை தேர்தல்களில் சிக்கபள்ளாபூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி-யான வீரப்ப மொய்லி, 2019 மக்களவை தேர்தலில் தோல்வியடைந்தார். இம்முறையும் அதே தொகுதியில் சீட் கேட்டார் மொய்லி. ஆனால் அவருக்கு காங்கிரஸ் கட்சி மேலிடம் சீட் வழங்க மறுத்துவிட்டது. இந்நிலையில், தேர்தல் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக நேற்று அறிவித்தார்.

இதுதொடர்பாக நேற்று பேசிய வீரப்ப மொய்லி, நான் சிக்கபள்ளாபூர் தொகுதியில் போட்டியிட்டிருந்தால் இம்முறை கண்டிப்பாக நான் தான் ஜெயித்திருப்பேன். எனக்கு சிக்கபள்ளாபூர் தொகுதியில் போட்டியிட டிக்கெட் கிடைக்கவில்லை என்று எந்த வருத்தமும் இல்லை. கட்சி தலைமையின் முடிவுக்கு நான் எப்போதுமே கட்டுப்பட்டு நடப்பவன். என்னை ஒரு பதவி ஆசை பிடித்தவனாக மக்கள் மத்தியில் காட்ட நான் விரும்பவில்லை. நான் கட்சிக்காக தொடர்ந்து உழைப்பேன்.

தேர்தலில் மட்டும் தான் போட்டியிட மாட்டேன். ஆனால் கட்சிக்காக தொடர்ச்சியாக உழைத்துக்கொண்டே இருப்பேன். . நான் தேர்தல் அரசியலில் இருந்து மகிழ்ச்சியுடன் ஓய்வுபெறுகிறேன். இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

The post டிக்கெட் கிடைக்காததால் எந்த வருத்தமும் இல்லை; தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வுபெறுகிறேன்: காங். மூத்த தலைவர் வீரப்ப மொய்லி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: