நடிகையின் பலாத்கார வீடியோவை மாஜிஸ்திரேட், 2 நீதிமன்ற ஊழியர்கள் அனுமதியின்றி பார்த்தனர்: விசாரணை அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்

திருவனந்தபுரம்: மலையாள நடிகையின் பலாத்கார காட்சிகளை மாஜிஸ்திரேட் உள்பட 3 நீதிமன்ற ஊழியர்கள் அனுமதியின்றி திறந்து பார்த்ததாக நீதிமன்ற விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, பிரபல மலையாள நடிகை, கடந்த 2017ம் ஆண்டு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் செல்லும் வழியில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவரது முன்னாள் கார் டிரைவர் சுனில் குமார் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் பிரபல மலையாள நடிகர் திலீப் சதி திட்டம் தீட்டியதாக தெரியவந்ததை தொடர்ந்து, அவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நடிகையை பலாத்காரம் செய்த கும்பல் அக்காட்சிகளை செல்போனில் பதிவு செய்தது. இக்காட்சிகள் அடங்கிய ஒரு மெமரி கார்டை போலீசார் பிறகு கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், இந்த மெமரி கார்டை அனுமதியின்றி சிலர் திறந்து பார்த்துள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி, பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்ற உத்தரவின்படி விசாரணை அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் வெளியாகியுள்ளன.

அது வருமாறு:
பலாத்கார காட்சிகள் அடங்கிய மெமரி கார்டு, நீதிமன்றத்தில் வைத்து 3 முறை அனுமதியின்றி திறந்து பார்க்கப்பட்டுள்ளது. அங்கமாலி மாஜிஸ்திரேட் லீனா ரஷீத், மாவட்ட நீதிபதியின் தனி உதவியாளர் மகேஷ் மற்றும் விசாரணை நீதிமன்ற சிரஸ்தார் தாஜுதீன் ஆகியோர் மெமரி கார்டை திறந்து பார்த்துள்ளனர். அங்கமாலி மாஜிஸ்திரேட் லீனா ரஷீத் ஒரு வருடத்துக்கு மேல் மெமரி கார்டை தன்னிடம் வைத்திருந்துள்ளார். அவர் 2018ம் ஆண்டிலும், மாவட்ட நீதிபதியின் தனி உதவியாளர் மகேஷ் 2018ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதியும், விசாரணை நீதிமன்ற சிரஸ்தார் தாஜுதீன் 2021ம் ஆண்டு ஜூலை 19ம் தேதியும் மெமரி கார்டை பார்த்துள்ளனர். மகேஷ் இரவு 10.52 மணியளவில் தனது போனில் மெமரி கார்டை போட்டு பார்த்துள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே விசாரணை அறிக்கையில், தவறு செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு சிபாரிசு செய்யப்படவில்லை.எனவே ஒரு ஐஜி தலைமையில் இதுதொடர்பாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறி, பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை (12ம் தேதி) விசாரணைக்கு வருகிறது.

The post நடிகையின் பலாத்கார வீடியோவை மாஜிஸ்திரேட், 2 நீதிமன்ற ஊழியர்கள் அனுமதியின்றி பார்த்தனர்: விசாரணை அறிக்கையில் பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Related Stories: