இளம் வாக்காளர்களை செல்போனில் தொடர்பு கொண்டு விழிப்புணர்வு சிறப்பு அழைப்பு மையத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார் திருவண்ணாமலை மாவட்டத்தில் முதன்முறை வாக்களிக்கும்

திருவண்ணாமலை, ஏப்.11: திருவண்ணாமலை மாவட்டத்தில், முதன்முறை வாக்காளிப்பவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு வாக்களிக்க சிறப்பு அழைப்பு மையம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் முதன்முறை வாக்களிக்க உள்ள 46,454 இளம் வாக்காளர்கள், தவறாமல் வாக்களிக்க செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

அதையொட்டி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு அழைப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தில் திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம், கலசபாக்கம் ஆகிய ஒன்றியங்களில் பணிபுரியும் 50 ஊழியர்கள், முதன்முறை வாக்களிக்கும் இளம் வாக்காளர்களை தொடர்பு கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பணியை, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று பார்வையிட்டார். அப்போது, இளம் வாக்காளர்களை செல்போனில் ெதாடர்பு கொண்டு, வரும் 19ம் தேதி தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என வலியுறுத்தினார்.

அதேபோல், சிறப்பு அழைப்பு மையத்தில் பணியில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி பணியாளர்கள், ஒவ்வொருவரும் தலா 500 இளம் வாக்காளர்களை செல்போனில் தொடர்பு கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். வெளியூர் சென்றிருப்பதாக தெரிவித்த இளம் வாக்காளர்களிடம், வரும் 19ம் தேதி தாங்கள் வாக்களிக்க வேண்டிய சொந்த ஊருக்கு வந்து, ஜனநாயக கடமையை நிறைவேற்றி, 100 சதவீதம் வாக்களித்த பெருமையை திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பெற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில், 100 சதவீதம் வாக்களிப்போம், என் வாக்கு, என் கடமை போன்ற வாசகங்களை பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களின் கைகளில் மருதாணி இட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், டிஆர்ஓ பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் ரிஷப், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) குமரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் மீனாம்பிகை, வட்டார திட்ட அலுவலர் என்.சரண்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post இளம் வாக்காளர்களை செல்போனில் தொடர்பு கொண்டு விழிப்புணர்வு சிறப்பு அழைப்பு மையத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார் திருவண்ணாமலை மாவட்டத்தில் முதன்முறை வாக்களிக்கும் appeared first on Dinakaran.

Related Stories: