பா.ஜ வேட்பாளர் தேவநாதன் ரூ.525 கோடி மோசடி செக் திரும்பிய நிலையில் பி. பார்மில் அண்ணாமலை கையெழுத்திட்டது எப்படி? காங்கிரஸ் செய்தி தொடர்புத்துறை தலைவர் ஆனந்த் சீனிவாசன் கேள்வி

சென்னை: காங்கிரஸ் செய்தி தொடர்பு துறை தலைவர் ஆனந்த் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது: தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் என்ற நிதி நிறுவனம், முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி, முதலீடு செய்தவர்களிடம் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 150க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளதால் தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டவர்கள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர் தேர்தலில் போட்டியிட பி படிவத்தில் எப்படி அண்ணாமலை கையெழுத்திட்டார். மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் காவல்துறையிடம் புகார் அளித்து வழக்கு தொடரப்படும். ரூ.525 கோடி புகார் குறித்து தேவநாதனை விசாரிக்க வேண்டும். எப்போதும் நியாயம் பேசும் நிர்மலா சீதாராமன் இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்க வேண்டும். சிறப்பாக செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்தில் தேவநாதன் ரூ.525 கோடி மோசடி செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான சூரியப்பிரகாசம் கூறுகையில், ‘‘மயிலாப்பூர் நிதி நிறுவனம் இந்தியாவில் உள்ள பழமையான நிதி நிறுவனங்களில் ஒன்று. 125 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்ட நிதி நிறுவனத்தில், ரூ.525 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக சிவகங்கை பாஜ வேட்பாளர் தேவநாதன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் தேவநாதன் வெளிநாடு தப்பி சென்றால், அவரை பிடிப்பது கடினம் என்பதால் தமிழ்நாடு காவல்துறை இந்த பிரச்னையில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். அண்ணாமலைக்கு இந்த விவகாரம் குறித்து தெரியும். எனவே, சிவகங்கை பாஜ வேட்பாளர் தேவநாதனை அவர் பாதுகாக்க கூடாது’’ என்றார். பேட்டியின் போது, காங்கிரஸ் சட்டத் துறை துணை தலைவர் எஸ்.கே.நவாஸ் உடன் இருந்தார்.

The post பா.ஜ வேட்பாளர் தேவநாதன் ரூ.525 கோடி மோசடி செக் திரும்பிய நிலையில் பி. பார்மில் அண்ணாமலை கையெழுத்திட்டது எப்படி? காங்கிரஸ் செய்தி தொடர்புத்துறை தலைவர் ஆனந்த் சீனிவாசன் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: