தருமபுரம் தலைமை மடாதிபதிக்கு மிரட்டல் விடுத்த விவகாரம்: பா.ஜ.க. நிர்வாகி அகோரம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!

சென்னை: பா.ஜ.க. நிர்வாகி அகோரம் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மிகவும் பழமையான மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார். இவரது உதவியாளர் விருதகிரி என்பவர் மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளருக்கு கடந்த பிப்ரவரி 21ம் தேதி ஒரு புகார் மனு ஒன்றினை அனுப்பி இருந்தார். அதில், தருமபுரம் தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச வீடியோ, ஆடியோ இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்த வினோத், செந்தில், விக்னேஷ் ஆகியோருக்கு மயிலாடுதுறை பாஜக தலைவர் அகோரம் உடந்தையாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தருமபுரம் ஆதினத்துக்கு மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த மார்ச் மாதம் அகோரம் கைதானார். இதையடுத்து ஜாமினில் விடுவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அகோரம் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி டி.வி. தமிழ்செல்வி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி, பாஜக தலைவர் அகோரத்துக்கு எதிராக கிட்டதாக 47 வழக்குகள் நிலுவையில் உள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேர் தலைமறைவாக உள்ளதால் அகோரத்துக்கு ஜாமின் தரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அகோரத்தை ஜாமினில் விடுவித்தால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அகோரத்தின் தரப்பில், 47 வழக்குகளில் சில வழக்குகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ள வழக்குகள் எல்லாம் அரசியல் தொடர்பான வழக்குகள், மறியல் மற்றும் மேடை பேச்சுக்கள் தொடர்பான வழக்குகள் என்று குறிப்பிட்டார். ஆனால் அந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்ட தலைவர் அகோரத்தின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post தருமபுரம் தலைமை மடாதிபதிக்கு மிரட்டல் விடுத்த விவகாரம்: பா.ஜ.க. நிர்வாகி அகோரம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!! appeared first on Dinakaran.

Related Stories: