காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு 10 ஆண்டுகால பாஜ ஆட்சியில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

*துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேச்சு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து, கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி மற்றும் நாயுடுமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, துணை சபாநாயகர் குபிச்சாண்டி பேசியதாவது:

நாங்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தொகை தருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால், ₹6 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டு சென்ற எடப்பாடி பழனிசாமி முடியாது என்றார். ஆனால், வெற்றி பெற்றதும், கொடுத்த வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்றினார். பெண்களின் உழைப்பை அங்கீகரித்து, உரிமைத்தொகையை மாதந்தோறும் ரூ.1,000ஐ முதல்வர் வழங்குகிறார்.

தற்போது விடுபட்டுள்ள தகுதியுள்ள பயனாளிகளுக்கு, தேர்தல் முடிந்ததும் உரிமைத்தொகை வழங்கப்படும் என முதல்வர் உறுதி அளித்திருக்கிறார். கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் வழங்குகிறார். குழந்தைகள் பசியோடு பள்ளிக்கு செல்லக்கூடாது என்பதற்காக, காலை உணவு திட்டத்தை வழங்கினார்.

கிராமங்களில் வேலைவாய்ப்பு இல்லாமல் நகரங்களுக்கு செல்லும் நிலையை மாற்றியது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலைத் திட்டம். எனவே, இத்திட்டத்தில் ஆண்டுக்கு 150 நாட்கள் வேலையும், நாள்தோறும் ₹400 கூலியும் வழங்கப்படும் என முதல்வர் மு..ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகால பாஜ மோடி ஆட்சியில், யாருக்காவது வேலைவாய்ப்பு கொடுத்தார்களா. விலைவாசியை குறைத்தார்களா. காஸ் விலையை, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினார்கள். அத்தியாவசியமான உணவு பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும், அரசியல் சட்டத்தை காப்பாற்ற வேண்டும், மதச்சார்பின்மையை பாதுகாக்க வேண்டும் என்றால், பாஜ ஆட்சியை அகற்றவிட்டு இந்தியா கூட்டணி ஆட்சி ஒன்றியத்தில் அமர வேண்டும். இந்த தேர்தலில் மீண்டும் பாஜ வென்றால், தேர்தல் முறையே இருக்காது என்ற நிலை உருவாகும்.

எனவே, இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்திட, முதல்வர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுபடுத்திட, திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். அப்போது, ஒன்றிய செயலாளர்கள் ஆராஞ்சி ஆறுமுகம், ராமஜெயம், வி,பி.அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், நகர செயலாளர் சி.கே.அன்பு, பேரூராட்சி தலைவர் சரவணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு 10 ஆண்டுகால பாஜ ஆட்சியில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் appeared first on Dinakaran.

Related Stories: