வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப் பன்றியை நீக்க கோரிக்கை

 

தேவாரம், ஏப்.10: காட்டுப்பன்றியை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் தேவாரம், கோம்பை, ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, சுருளி, க.புதுப்பட்டி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் காட்டுப்பன்றிகள் கூட்டம், கூட்டமாக வாழ்கின்றன.

இவை அடிக்கடி, மலையடிவாரத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனை விரட்டுவதற்கு, விவசாயிகள், வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதிகாரிகள் காட்டுப்பகுதிக்குள் விரட்டினாலும், மீண்டும் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன.

காட்டுப்பன்றிகள் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பட்டியலில் இருப்பதால், அவற்றை பொதுமக்களோ, விவசாயிகளோ விரட்டியடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது. அப்படி செய்தால் வனசட்ட பாதுகாப்புப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் வனவிலங்குகள் பட்டியலில் இருந்து உடனடியாக காட்டுபன்றிகளை நீக்க வேண்டும் என்றும், விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றியை விவசாயிகளே விரட்ட அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப் பன்றியை நீக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: