இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமாருக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க ஒன்றிய அரசு உத்தரவு..!!

டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமாருக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ம்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கண்காணித்து வருகிறார். இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமாருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் Z பிரிவு பாதுகாப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

உளவு அமைப்பினர் எச்சரிக்கையை தொடர்ந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு Z பிரிவு பாதுகாப்பு அளிக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாடு முழுவதும் ராஜிவ் குமார் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த வீரர்கள் ராஜிவ் குமாருக்கு பாதுகாப்பு வழங்குவார்கள். மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு ராஜிவ் குமார் நேரில் பயணம் மேற்கொள்ளக்கூடும். ஆய்வுக்காக செல்லக்கூடும். குறிப்பாக மாவோயிஸ்ட் அதிகம் நிறைந்த சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற பகுதிகளுக்கு கூட செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

எனவே அவற்றை கருத்தில் கொண்டு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய தினம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்பு சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட இயக்குனர்களை மாற்றக் கோரி மனு அளித்ததோடு, போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக கூட இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமாருக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது? யாரிடம் இருந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது? என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

The post இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமாருக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க ஒன்றிய அரசு உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: