முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வட்டி என கவர்ச்சி அறிவிப்பு: மயிலை இந்து நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி: தேர்தல் செலவுக்கு பணத்தை எடுத்துக் கொண்டதாக நிதி நிறுவன தலைவரான பாஜ வேட்பாளர் தேவநாதன் மீது குற்றச்சாட்டு

* காசோலையில் பணம் இல்லாமல் திரும்பியது
* பணத்தை கேட்டு பாதிக்கப்பட்டவர்கள் குவிந்ததால் பரபரப்பு;

சென்னை: தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் என்ற நிதி நிறுவனம், முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி, முதலீடு செய்தவர்களிடம் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. 150 ஆண்டுகள் பழமையான இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலும் ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிதி நிறுவனம் முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் இந்த நிதி நிறுவனத்தில் தமிழகம் முழுவதும் ரூ.525 கோடிக்கு மேல் நிரந்தர வைப்பு தொகையாக உள்ளது. அதேபோல் மயிலாப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் முதியவர்கள் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தங்களது பிள்ளைகள் அனுப்பும் பணத்தை இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். மயிலாப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த நிதி நிறுவனத்திற்கு சென்னையில் மட்டும் 5 கிளைகள் உள்ளன. இந்த நிதி நிறுவனத்தை பராமரித்து வந்த முன்னாள் நிர்வாகிகள், முதலீட்டாளர்கள் செலுத்திய பணத்தை தங்கத்தில் முதலீடு செய்து, 300 கிலோவுக்கு மேலான தங்கத்தை பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. காலப்போக்கில் இந்த நிதி நிறுவனத்தை பராமரிக்க அவ்வப்பொழுது தேர்தல் நடத்தப்படும்.

அதன்படி சில ஆண்டுகளாக ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்’ நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக தேவநாதன் யாதவ் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இயக்குநராக தேவ சேனாதிபதி, நிரந்தர நிதி செயலாளராக ரவிச்சந்திரன் ஆகியோர் தற்போது நிர்வாகிகளாக உள்ளனர். இந்த நிதி நிறுவனத்தில் குறைந்தபட்ச நிரந்தர வைப்பு நிதி ரூ.1 லட்சம் எனவும், அதிகபட்சமாக எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தலாம். செலுத்தும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீத வட்டி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் அதை நம்பி தமிழ்நாடு முழுவதும் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும், ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையிலும் ஏராளமானவர்கள் முதலீடு செய்துள்ளனர்.

இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட திருவாரூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் கூறியதாவது: இந்த நிதி நிறுவனத்தை பற்றி எனது நண்பர்கள் மூலம் தெரியவந்தது. இதனால் எனது பெற்றோர் எனது மேற்படிப்புக்கு சேர்த்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தை கடந்த 2022ல் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தேன். சில மாதங்கள் முறையாக வட்டி அளித்தார்கள். அதன் பிறகு எனது மேற்படிப்புக்கு நிரந்தர முதலீட்டிற்கான வட்டியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எடுக்க சென்றேன். ஆனால் அவர்கள் எனக்கு தர வேண்டிய வட்டி ரூ.55 ஆயிரத்திற்கு தற்போது பணம் இல்லை ஒரு மாதம் கழித்து வாருங்கள் என்று கூறி அனுப்பிவிட்டனர்.

பின்னர் மீண்டும் ஒரு மாதம் கழித்து வட்டி பணத்தை கேட்டால், நீங்கள் கேட்கும் நேரத்தில் பணத்தை தர முடியாது. மற்றொரு நாள் வாருங்கள் என்று சாதாரணமாக கூறினர். எங்கள் வட்டி பணத்தை வாங்க அலுவலகத்திற்கு காலை 8 மணிக்கு வந்தால் மதியம் 3 மணி வரை காக்க வைத்துவிட்டு பிறகு இன்னொரு நாளைக்கு வாருங்கள் என்கின்றனர். எதிர்த்து கேள்வி கேட்டால் மிரட்டுகின்றனர். கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் மட்டும் இந்த நிதி நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்ட 150க்கும் மேற்பட்ட காசோலைகள் பணம் இல்லாமல் திரும்ப வந்துவிட்டது.

இதுகுறித்து நாங்கள் கேட்டால், புதிய வங்கிக்கு நிதி நிறுவனத்தின் கணக்குகளை மாற்றியுள்ளோம். அதனால் தான் இப்படி என்று சாதாரணமாக கூறுகின்றனர். 2022ல் நான் ரூ.5 லட்சம் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தியபோது, சிட்டி யூனியன் வங்கியில் கணக்கு இருந்தது. அதன் பிறகு கரூர் வைசியா வங்கியில் கணக்குகள் மாற்றப்பட்டது. தற்போது ஆக்சிஸ் வங்கியில் கணக்கு மாற்றப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு முறையும் நிதி நிறுவனத்தின் கணக்குகளை மாற்றி எங்கள் முதலீட்டு பணத்தை ஏமாற்றி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் மயிலாப்பூரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு 150க்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு நிதியை திரும்ப கொடுக்கும்படி முற்றுகையிட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

அதேபோல் இந்த நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்த ராமநாதன் என்பவர் கூறியதாவது: நான் இந்த நிதி நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் முதலீடு செய்தேன். ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சரியாக வட்டி கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர். இதனால் நான் முதலீடு செய்த பணத்தை முழுமையாக தர வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர் நீங்கள் சொல்லும் நேரத்திற்கு பணத்தை எங்களால் தர முடியாது என்கின்றனர். அதையும் மீறி நீங்கள் போலீசில் புகார் அளித்தால், உங்கள் பணத்திற்கு நாங்கள் பொறுப்பு இல்லை என்று நேரடியாக மிரட்டுகின்றனர்.

முதலீடு செய்த பணத்தை வாங்கி விடலாம் என்ற நோக்கில் நான் போலீசுக்கு புகார் அளிக்காமல் உள்ளேன். எங்களுக்கு சந்தேகம் எல்லாம், தற்போது இந்த நிதி நிறுவனத்தின் தலைவராக உள்ள தேவநாதன் யாதவ், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிடுவது தான். தேர்தலில் நிற்பது அவரது சொந்த விருப்பம். ஆனால் அவர் தலைவராக உள்ள நிதி நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கு உரிய நேரத்தில் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்துவதால், முதலீட்டாளர்களின் பணத்தை நாடாளுமன்ற தேர்தல் செலவுக்கு மொத்தமாக எடுத்து சென்றுவிட்டாரோ என்று எங்களுக்கு சந்ேதகம் உள்ளது.

5 ஆயிரம் பேர் முதலீட்டாளர்களான உள்ள இந்த நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் கூட பணம் இல்லை என்பதை ஏற்க முடியவில்லை. அப்படி என்றால், புதிய முதலீட்டாளர்களின் பணத்தை பெற்று தான் பழைய முதலீட்டாளர்களுக்கு வட்டி கொடுப்பதாக எங்களுக்கு சந்ேதகம் உள்ளது. எங்களுக்கு முதலீடு செய்த பணம் கிடைத்தால் போதும். நிதி நிறுவனத்தின் மோசடிகளை மறைக்கத்தான் தற்போது தேர்தல் பிரசாரத்திற்காக வந்த மோடியுடன் மேடையில் ஒன்றாக நின்று தனது பாதுகாப்பை உறுதி செய்தாரோ என்று சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட ராமநாதன் தெரிவித்தார்.

* காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சீனிவாசன் டிவிட்
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சீனிவாசன் தனது டிவிட்டர் பதிவில், ‘‘மயிலாப்பூர் இந்து பெர்மனன்ட் பண்டில் (சாசுவத நிதி லிட்) ரூ.525 கோடி காணவில்லையாம். டெபாசிட்டர் எல்லாம் பதற்றத்தில் உள்ளார்கள். ரிசர்வ் வங்கி மேற்பார்வையில் உள்ளதாம். இதன் தலைவர் யாருன்னா தேவநாதன் யாதவ். சிவகங்கை வேட்பாளர்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இவரது பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் குறிப்பிட்டுள்ள தேவநாதன் யாதவ் தற்போது பாஜ சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனது சொத்து மதிப்பாக ரூ.206 கோடியை காட்டியுள்ளார். தமிழகத்தில் சொத்து மதிப்பு அதிகமாக காண்பித்துள்ள வேட்பாளர்களில் முதல் இடத்தை ஈரோடு தொகுதி வேட்பாளரும், இரண்டாவது இடத்தை தேவநாதன் யாதவும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* காங்கிரஸ் தலைவர் எச்சரிக்கை
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: சென்னையில் ஒரு செய்தி இப்போ பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கிறது. ஒரு நிதி நிறுவனம் ஏறக்குறைய 500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளது. இந்த மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் யார்?. மயிலாப்பூர் இந்து பெர்மனன்ட் பண்ட் லிமிடெட். இந்த லிமிடெடில் 500 கோடிக்கு மேல் மோசடி செய்தவர்களை ஏன் இதுவரை விசாரிக்கவில்லை. அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது. வருமானவரித்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது. அவர் பாஜ வேட்பாளராகவும் களத்தில் இருக்கிறார். ஏன் இதைப்பற்றி வாய் திறக்க மாட்டேன் என்கிறார்கள். மோடியாகட்டும், அண்ணாமலையாகட்டும். இதை பற்றி எல்லாம் பேச வேண்டும். இன்றைக்கு அதில் பங்குதாரர்கள் டெபாசிட் செய்தவர்கள் எல்லாம் நடுவீதியில் நிற்கிறார்கள். எங்கள் காங்கிரஸ் இயக்கத்தின் சட்டத்துறையை சார்ந்தவர்கள் புகார் அளிக்க போகிறார்கள். இந்த புகார் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.

The post முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வட்டி என கவர்ச்சி அறிவிப்பு: மயிலை இந்து நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி: தேர்தல் செலவுக்கு பணத்தை எடுத்துக் கொண்டதாக நிதி நிறுவன தலைவரான பாஜ வேட்பாளர் தேவநாதன் மீது குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: