ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் 13 ஆயிரம் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 13 ஆயிரம் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை தேரோட்டம் நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து பெரிய மாரியம்மன் தினமும் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் முக்கிய வீதி வழியாக வந்து கோயிலில் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சுமார் 13 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். பூக்குழி திருவிழாவை காண திருவில்லிபுத்தூர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கூட்ட நெரிசலை தடுக்க தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. பூக்குழி திருவிழாவையொட்டி நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து செருப்பு இல்லாமல் நடக்கும் பக்தர்களின் பாதம் சுடாமல் இருக்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில் சாலையில் தண்ணீர் தெளிக்கப்பட்டது.

மேலும் தேங்காய் நார் பரப்பப்பட்டிருந்தது. மேலும் ஒரு சில இடங்களில் தற்காலிக ஷவர்களும் அமைக்கப்பட்டிருந்தன. தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி முகேஷ் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பூக்குழி திருவிழாவை காண ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் விழாக்கோலம் பூண்டது. ஏற்பாடுகளை தக்கார் முத்துராஜா, நிர்வாக அதிகாரி தேவி தலைமையில் கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். நாளை தேரோட்டம் நடைபெறுகிறது.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் 13 ஆயிரம் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Related Stories: