தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தாலும் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 4-ந்தேதி வரை அமலில் இருக்கும் :சத்ய பிரதா சாஹு தகவல்

சென்னை : தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்காக பூத் சிலிப் வழங்கும் பணி 33.46 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு,”தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேர்தல் சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஓட்டல் மேலாளரிடம் நேற்று ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வருமான வரித்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக வருமான வரித்துறை, தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பும். வருமான வரித்துறை அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கும். ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக தேர்தல் செலவின பார்வையாளர்களும் அறிக்கை அளிப்பார்கள்.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்காக பூத் சிலிப் வழங்கும் பணி 33.46 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 2.08 கோடி பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் இதுவரை ரூ.208.41 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் தமிழகம் முழுவதும் ரொக்கப் பணம் மட்டும் ரூ.88.12 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ரூ.4.53 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.தமிழகத்தில் தேர்தல் நடைமுறை ஜூன் 4-ந்தேதி வரை அமலில் இருக்கும். ஏப்ரல் 19-ந்தேதி வாக்குப்பதிவு முடிந்த பிறகும் வாகன சோதனை தொடரும். எனவே உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகள் ஜூன் 4-ந்தேதி வரை தொடரும். விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கூறப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலோடு, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தாலும் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 4-ந்தேதி வரை அமலில் இருக்கும் :சத்ய பிரதா சாஹு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: